Sermons

ஆவிக்குரிய ஆசீர்வாதம்

முதலாவது மோசே கூடாரம் போட்டு கர்த்தரை தொழுது கொண்டார்கள். பின்பு சாலொமோன் கர்த்தருக்காக ஆலயம் கட்டினான். அதிலே, ஜனங்கள் அவரை தொழுதுக் கொண்டார்கள். இன்று நாம் கர்த்தரை நமக்குள்ளாக பெற்று ஆண்டவரை தொழுது கொண்டிருக்கிறோம். யோபு 29:3,4 இல் “அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன். தேவனுடைய இரகசியச் செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.அதாவது அவர் தீபம் நமக்குள் இருப்பது என்பது தேவனுடைய இரகசிய செயலாகும். நமக்குள் இருக்கும். இரகசிய செயலை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலாவது அவருடைய வெளிப்படையான செயலை நாம் அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தர் இந்த உலகத்தை உண்டாக்கியது என்பது வெளிப்படையான செயலாகும். வெளிப்படையான செயல் இவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்றால் இரகசிய செயல் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

யோபு 26:14 இல் இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், படைப்பைக் குறித்து சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கே அவருடைய மொத்த படைப்பையும் கடைக்கோடியானவைகள் என்று வேதம் சொல்கிறது. பிலிப்பியர் 3:21 இல்அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

(i) நம்முடைய சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்துக்கு ஒப்பாக மாற்றுவது அவருடைய வல்லமையான செயல் என்று வேதம் கூறுகிறது.  

(ii) அதாவது உலகத்தில் வந்து மரித்து நமக்கு இரட்சிப்பை கொடுத்து நம்மை மறுரூபமாக்குவது அவருக்கு வல்லமையான செயலாகும்.

(iii) இந்த உலகத்தை ஆறு நாட்களில் உண்டு பண்ணினார். ஆனால், ஆண்டவருக்கு மனிதனை இரட்சிப்பதற்கு அவர் 33 1/2 ஆண்டுகாலம் இந்த உலகத்திலே வாழ்ந்து, மரித்து அதற்காக அவர் பட்ட பிரயாசங்கள் அநேகம். இது அவருடைய பார்வையிலே வல்லமையான செயலாகும்.

ரகசிய செயல்:

  • அவர் நமக்குள் வந்து வீட்டைக் கட்டி வாசம் செய்வதுதான் அந்த இரகசிய செயல்.
  • ஞானம் – கிறிஸ்து, வீடு – சரீரம், ஏழு தூண்கள் - ஏழு செயல் (நீதிமொழி 9:1,2)

7 தூண்கள்:

  • ஞானம் - 1 கொரிந்தியர் 1:31
  • தேவநீதி - 1 கொரிந்தியர் 1:31
  • பரிசுத்தம் - 1 கொரிந்தியர் 1:31
  • மீட்பு - 1 கொரிந்தியர் 1:31
  • தேவ பலன் - 1 கொரிந்தியர் 1:24 (கிறிஸ்து தேவபெலனும், தேவஞானமுமாயிருக்கிறார்).
  • சமாதானம் - யோவான் 14:27 (என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு கொடுக்கிறேன்).
  • கிருபை - 2 கொரிந்தியர் 12:9 (என் கிருபை உனக்கு போதும்).

கிறிஸ்து ஞானமாகி விலையேறப் பெற்ற ஆவிக்குரிய மாளிகையை நமக்குள் கட்டுகிறார். அந்த தூண்கள் ஆவிக்குரிய ஏழு செயல்கள்.

இந்த மாளிகையின் பெயர் சீயோன் இது ஆவிக்குரிய சீயோன் “கர்த்தர் சீயோனைக் கட்டி தமது மகிமையில் வெளிப்படுவார்” (சங்கீதம் 102:15).

சீயோன்:

பரலோக சீயோன், இஸ்ரவேலில் உள்ள சீயோன், நமக்குள் கட்டப்படுகிற ஆவிக்குரிய சீயோன். அந்த சீயோனைக் குறித்துதான் இப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு நாம் ஒவ்வொருவருமே இந்த ஆவிக்குரிய மாளிகை நம்முடைய வாழ்க்கையிலே பெற்றவர்களாகக் காணப்பட வேண்டும். இதை எப்படி நாம் பெற்றுக் கொள்வது, இந்த மாளிகையை நம்முடைய வாழ்க்கையில் நீங்களும், நானும் எப்படி பெற்றுக் கொள்வது. "தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி," (நீதிமொழிகள் 9:2) என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், சிலுவையிலே ஆண்டவர் உங்களுக்காகவும்,எனக்காகவும் மரித்து, தன்னுடைய சரீரத்தை பிடிக்கக்கொடுத்து, தன்னுடைய சரீரத்தில் அடிக்கப்பட்டு, அந்த இரத்தத்தினாலே நம்மை மீட்டெடுத்த ஆண்டவர் இன்றைக்கு இந்த ஆவிக்குரிய மாளிகையை உங்களுக்கும், எனக்கும் கட்டி வைத்திருக்கிறார்.

சாட்சி:

வெளி தேசத்திலே ஒரு மகன் இருந்தான், அவன் திருமணம் ஆனவுடன் தன்னுடைய தாயாரை முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்து விட்டான். தன்னுடைய வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பார்கள் என்று கருதி முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருந்தான். ஒருநாள் தன்னுடைய மனைவிக்கு பிரசவக்காலம் வந்தது. மருத்துவமனையில் இருக்கும் பொழுது, தன்னுடைய மனைவியின் பிரசவத்தை அருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார், தன் மனைவியினுடைய கதறல் சத்தம், தன்னுடைய மனைவி இரத்தம் சிந்தி குழந்தையை பெற்றெடுத்த அந்த சம்பவம் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த மனிதன் பிறந்த குழந்தையை தன்னுடைய கையில் வாங்காமல் நேராக எழுந்து முதியோர் இல்லத்திற்கு சென்றுவிட்டார். தன்னுடைய தாயின் கரத்தைப் பிடித்து அம்மா நீங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று தாயின் கரத்தைப் பிடித்து வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்தான். இதேபோல் தானே என் தாயும் என்னை ஒருநாள் பெற்றெடுத்திருப்பாள் என்கிற உணர்வு வந்தது, அந்த இரத்தம் சிந்துதல், அந்த கதறுதல் தானே என் ஆசீர்வாதத்திற்கு காரணம், என் தாயை நான் அனாதை இல்லத்தில் விட்டு விட்டேனே என்று மனபாரத்தோடு தன் தாயை அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டு அதன்பிறகு தன்னுடைய குழந்தையை வந்து பார்த்தான்.

சிலுவை தியானம்:

அன்பானவர்களே! இதேபோல் தான் இயேசு கிறிஸ்துவும் சிலுவையிலே அவருடைய கதறல் சத்தம், சிலுவையில் உங்களுக்காகவும், எனக்காகவும் தன்னுடைய கொழுத்த ஜந்துக்களை அடிக்கக் கொடுத்து தன்னுடைய திராட்ச ரசமாகிய இரத்தத்தை சிந்தி, இந்த ஆவிக்குரிய மாளிகையை உங்களுக்குள்ளாகவும், எனக்குள்ளாகவும் தேவன் கட்டியிருக்கிறார். இன்றைக்கு யாராவது இயேசுவை விட்டு விட்டிருந்திர்களானால் இன்றைக்கு முதலாவது அவரைக் கூப்பிட்டு உங்கள் உள்ளத்தில் வைத்துக்கொண்டு மற்ற வேலைகளைப் பாருங்கள்,  பாவம் அப்படிப்பட்ட இயேசு கிறிஸ்து உங்கள் உள்ளத்திற்குள்ளும், வீட்டிற்குள்ளும் இல்லையென்றால், அது மிகப் பெரிய துரோகம், அவர் உங்களுக்காகவும், எனக்காகவும் எத்தனைப் பாடுபட்டார். இதை உணர்ந்து இயேசு எங்கே இருக்கிறார் என்று ஒரு கேள்வியை உங்களுக்குள்ளாக கேளுங்கள். இன்றைக்கு உங்களை விட்டு தூரம் போயிருந்தால் இயேசுவே வாரும் என்று, அந்த மகன் தன்னுடைய தாயை கூப்பிட்டது போல, அந்த இரத்த காட்சியை பார்த்ததுபோல, கல்வாரி காட்சி இன்று உங்கள்முன் வருமானால் நீங்கள் அந்த இயேசுவை உங்களுக்குள்ளாக பெற்று அந்த ஆசீர்வாதத்தை முழுமையாக சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் காரணம் சிலுவையிலே அவர் சிந்தின இரத்தம். அதன் பிறகு இந்த ஆவிக்குரிய மாளிகை, எல்லாம் தேவன் உங்களுக்குள்ளாகவும், எனக்குள்ளாகவும் கட்டி அழகுப் பார்க்கிறார். அதற்குப் பிறகுதான் இந்த பரிசுத்தம், சமாதானம், கிருபை, தேவா பெலன் மற்றும் மீட்பு இவையெல்லாம் சிலுவையிலே அவர் சிந்தின இரத்தத்திற்கு பிறகு நமக்கு கிடைத்த பரிசு. உங்களுக்கும், எனக்கும் அவர் ஒரு மாளிகை  கட்டுவதற்கு எத்தனை பாடுகள் பட்டிருக்கிறார் என்பதை இன்றைக்கு நீங்கள் உணர்ந்தவராக இயேசுவை நோக்கி பாருங்கள். புனித வெள்ளிக்கு மட்டும் சிலுவையை தியானிக்காமல், ஒவ்வொரு நாளும் நாம் சிலுவையை நோக்கிப்பார்த்து தியானிக்க வேண்டும், ஏனென்றால், இதில் தான் நம் ஆசீர்வாதம் இருக்கின்றது.  ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய ஆசீர்வாதமும் சிலுவையில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது. இந்த ஆவிக்குரிய மாளிகை நமக்கு சிலுவையில் இருந்துதான் வந்தது. ஒவ்வொரு நாளும் அதை ருசி பாருங்கள், ஒவ்வொரு நாளும் சிலுவையை நினைத்துப் பாருங்கள், ஒவ்வொரு நாளும் அதில் தஞ்சமடையுங்கள். இவைகளை நீங்கள் செய்யும்போது நீங்கள் பெறுகின்ற ஆசிர்வாதத்திற்கு அளவே இருக்காது. பார்த்தால் அது தெரியாதுங்க நான் ருசி பார்த்ததினால் உங்களுக்கு சொல்லுகிறேன். இந்த ஆசிர்வாதத்தை நான் என் வாழ்க்கையில் ருசி பார்த்தியிருக்கிறேன். அதற்கு பிறகுதான் நான் உங்களுக்கு முன்பாக நின்று கதறுகிறேன்.

"தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, " "புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்." "நீங்கள் வந்து என் அப்பத்தைப் பானம்பண்ணுங்கள்" (நீதிமொழிகள் 9:3-5) என்று சொல்லுகிறார். இதில் மூன்றாவது வசனம் சுவிசேஷத்தைக் குறிக்கிறது. ஆண்டவர் தன்னுடைய பணிவிடைக்காரரைக் கொண்டு உயர்ந்த மேடையிலிருந்து கூப்பிட்டு சொல்லுகிறார், இன்றைக்கு என்னை கொண்டு சொல்லுகிறார், கதுள்ளவன் கேட்கக்கடவன். நீங்கள் அவருடைய மரணத்தை ஒவ்வொரு நாளும் நினைவுக் கூர்ந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பெரிய ஊழியம் செய்யலாம், பெரிய சாதனைகளைப் படைத்து இருக்கலாம், அதெல்லாம் இருந்தாலும் ஒன்றே ஒன்றுதான் ஆண்டவர் நம்மிடத்தில் கேட்கிறார், என்னை நேசிக்கிறாயா? என்னை நேசிக்கிறாயா? என் கல்வாரியின் காட்சியை நீ கண்ட பின்னும் என்னை நேசியாமல் இருப்பாயோ? என்று கேள்வியை கேட்கிறார். நாம் சாதித்தவர்களாக இந்த உலகத்தை விட்டுப்போகக்கூடாது, இயேசு கிறிஸ்துவை மரணப்பரியந்தம் நேசித்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் சிலுவை தியானத்தை நினைத்து அந்த அன்பிலே நிலைத்து, இயேசு கிறிஸ்துவை நேசிக்கிற அந்த நேசத்திலே இந்த உலகத்திலிருந்து வருத்தத்தோடு அல்ல, சந்தோஷத்தோடு அவர்மேல் இருக்கிற அன்பிலே நாம் ஒவ்வொருவரும் போக பிரயாசப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த சிலுவை தியானம். 

Loading...