கிறிஸ்தவராக இருப்பது என்றால் என்ன என்று உங்களிடம் யாராவது கேட்டால், நீங்கள் என்ன நம்புகிறீர்கள்? என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று நினைக்கிறீர்கள்?
அந்த மாதிரி ஒரு கேள்வியை எங்கிருந்து ஆரம்பிப்பீங்க? அதாவது, இயேசுவைப் பற்றியும், அவர் எப்படி நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்பதைப் பற்றியும் பேச நீங்கள் விரும்பலாம். ஆனால், நாம் எல்லோரும் எப்படி பாவிகளாக இருக்கிறோம் என்பதை நீங்கள் இரண்டு தடவை சொல்லி விளக்கணும். அதன்பிறகு, பிதாவா கடவுள், குமாரனா கடவுள் (இயேசு), பரிசுத்த ஆவியா கடவுள் என்பதையும் சேர்த்து திரித்துவம் எப்படி இருக்கிறது என்பதையும் நீங்கள் சொல்லலாம். நம் பாவங்கள் தான் நம்மை கடவுளிடமிருந்து பிரித்தது, இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததுக்கு முழு காரணமும் நம் பாவங்கள் தான் என்று நீங்கள் சேர்த்து சொல்லலாம்.
ஆரம்பகால திருச்சபையில் கூட, பெண்களும் ஆண்களும், "நாம் நம்புவதை சுருக்கமாக விளக்க ஒரு வழி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? கிறிஸ்தவர்களாக நம்மை அடையாளம் காண நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள்?" என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையான கேள்விகள்தான் அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமாணத்தை உருவாக்க வழிவகுத்தன.
ஒரு மரத்தை ஒரு மரமாக மாற்றுவது எது? அல்லது ஒரு வீட்டை வீடாக மாற்றுவது எது? அல்லது ஒரு மனிதனை மனிதனாக ஆக்குவது எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அல்லது அதை வேறு விதத்தில் சொன்னால், நாம் ஒரு மரத்தை மரம் என்றோ ஒரு வீட்டை வீடு என்றோ அழைப்பதற்கு முன் என்ன குணங்கள் அவைகளில் இருக்க வேண்டும்? இத்தகைய சிக்கலான கேள்விகளைத் தான் தத்துவவாதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிந்தித்து வருகின்றனர். கிறிஸ்தவ இறையியல் ஆய்வை அணுகும்போது இதேபோன்ற கேள்வியை எதிர்கொள்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, எண்ணற்ற சபைகள் உள்ளன, அவைகள் அனைத்துமே "கிறிஸ்தவ" சபைகளாக இருந்தாலும் பல சபைகள் பல விஷயங்களைப் பற்றி உடன்படாமல் தான் இருக்கின்றன. எனவே, "கிறிஸ்தவ இறையியலுக்கு எந்தக் கோட்பாடுகள் அடிப்படையாகவும் இன்றியமையாதவைகளாகவும் இருக்கின்றன?" என்று கேட்பது பயனுள்ளதாக இருக்கும்.
கிறிஸ்துவிடம் நம்மை அர்ப்பணிப்பது நம்மை கிறிஸ்தவர்களாக்குவதற்கு போதுமானதாகும். அதே சமயம், கிறிஸ்தவர்கள் நம்புகிறவற்றின் நன்கு அறியப்பட்ட மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கையின் சுருக்கம் பற்றிய நமது தொடரின் முதல் பாடம் இதுவாகும். இந்தப் பாடத்திற்கு விசுவாசக் கட்டுரைகள் என்ற தலைப்பை நாம் வைத்துள்ளோம், ஏனென்றால் தங்களை "கிறிஸ்தவர்" என்று அழைக்கும் அனைவராலும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அறிக்கைகள் அல்லது கோட்பாடுகளின் சுருக்கமாக அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கையைப் பார்க்கப் போகிறோம்.
நோக்கம்:
எந்தவொரு விசுவாச அறிக்கையும் ஒருபோதும் கோட்பாட்டிலோ அல்லது நடைமுறையிலோ ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் உயர்த்தப்படக்கூடாது.
நம்முடைய விசுவாசம் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கு ஆவியானவரால் நமக்கு அருளப்பட்ட ஒரே தவறாத விதி வேதம் மட்டுமே. மறுபுறம், விசுவாச அறிக்கைகள் வேதத்தை நமக்கு சுருக்கமாக புரிய வைக்கக்கூடிய கற்பித்தலுக்கான கருவிகள் ஆகும். நாம் பார்க்கவிருப்பதைப் போல அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கையானது கிறிஸ்தவர்கள் வேதாகமத்தின் போதனைகளைக் கற்றுக்கொள்வதற்கும் உண்மையாக வாழ்வதற்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டது.
விசுவாசப் பிரமாணம்
என்றால் என்ன?
ஒரு விசுவாசப்பிரமாணம் என்பது நம்பிக்கையின் முறையான அறிக்கை. விசுவாசப் பிரமாணம் என்பது ஒரு தனி நபர் உறுப்பினராக இருக்கும் ஒரு அமைப்பு, நிறுவனம் விசுவாசமாக இருப்பதற்கான உறுதிமொழியாகும்.
அப்போஸ்தலர்களின் நம்பிக்கை எப்படி உருவாக்கப்பட்டது?
கிறிஸ்தவத்தின் பல கிளைகள் இன்னும் அப்போஸ்தலர்களின் நம்பிக்கைப் பிரமாணத்தை தங்கள் வழிபாட்டு முறையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துகின்றன. இன்றும் கூட, இயேசுவைப் பின்பற்றுபவர்கள் தாங்கள் நம்பும் அடிப்படைகளை அடையாளம் கண்டு அவற்றை உறுதி செய்வதற்கு அப்போஸ்தலர்களின் நம்பிக்கைப் பிரமாணம் ஒரு மதிப்புமிக்க வழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆதித்திருச்சபையில் நாம் தற்போது கையில் வைத்திருக்கும் விசுவாச பிரமாணங்கள் போல ஒரு நிலையான எந்த விசுவாச பிரமாணங்களும் கிடையாது. கிறிஸ்தவத்தின் போதனைகள் அவர்களுக்கு அப்போதைய சபை முப்பர்களின் பிரசங்கங்கள் வாயிலாகவும், சபை போதகங்கள் வாயிலாகவும் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு வருகிறது.
முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்டு, அனைத்து ஆதி திருச்சபைகளினால் அங்கீகரிக்கப்பட்டு. பிரகடனப்படுத்தப்பட்ட விசுவாச பிரமாணம் என்பது நிசயா விசுவாச பிரமாணம் ஆகும். இது கிபி 325 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது அப்போஸ்தலருடைய விசுவாச பிரமாணதின் நிலையான பரிணாமம் என்பது ஆதி திருச்சபைக்கு பின்பாக இருந்தாலும் அதன் சாரம் அனைத்தும் வேதத்தை அடிப்படையாக கொண்டது. அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம் என்பது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை கொள்கைகளை சுருக்கமாகக் கூறும் ஒரு முக்கிய அறிக்கையாகும். இதில், பிதா, குமாரனாகிய இயேசுகிறிஸ்து, மற்றும் பரிசுத்த ஆவியின் செயல்பாடு, இயேசுவின் பிறப்பு, பாடுகள், மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல், மறுவருகை, மேலும் பரிசுத்த சபை, பாவ மன்னிப்பு, உயிர்த்தெழுதல் மற்றும் நித்திய வாழ்வு ஆகியவற்றின் மீதுள்ள விசுவாசம் குறிப்பிடப்படுகிறது. அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவர்கள் வேதவாக்கியமே நமது கோட்பாட்டின் அடிப்படை என்பதை எப்போதும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள் என்கிற உண்மையின் அடிப்படையில் நாம் தொடங்கலாம்.
வேதம்:
விசுவாசிக்கிற அனைவரும் மனிதர்களை நல்ல மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தூண்டும் அறிவை கிறிஸ்துவின் சொற்களிலிருந்தும் போதனைகளிலிருந்துமே தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் பெறுவதில்லை. அவர் மனுவுரு எடுத்த போது பேசியதை மட்டும் நாம் அவருடைய வார்த்தைகளாக எடுத்துக்கொள்ளவில்லை..அதற்கு முன்பே, தேவனுடைய வார்த்தையான கிறிஸ்து மோசேயிலும் தீர்க்கதரிசிகளிலும் இருந்தார் மேலும்.. பரமேறிய பிறகு அவர் அப்போஸ்தலர்களின் மூலம் பேசினார். வேதம் அதன் எல்லா பகுதிகளிலும் கிறிஸ்துவின் வார்த்தை என்றும், அது எல்லா உண்மையான உபதேசங்களுக்கும் ஆதாரம் என்றும் ஒரிகன் கற்பித்தார்.
கி. பி. 354 முதல் 430 வரை வாழ்ந்தவரும், ஹிப்போவின் பிரபலமான பேராயராக இருந்தவருமான அகஸ்டின் என்பவர் ஞானஸ்நானம் எடுப்பதற்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்த புதிய விசுவாசிகளுக்கான பிரசங்கத்தில் விசுவாச அறிக்கையின் முக்கியத்துவத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தார். இந்த பிரசங்கத்தில், அவர் தனது சிந்தையில் நேரடியாகக் கொண்டிருந்த விசுவாச அறிக்கையானது நிசியா விசுவாச அறிக்கையாகும். ஆனால் அவருடைய வார்த்தைகள், சபையினுடைய முந்தைய நூற்றாண்டுகளில் காணப்பட்ட எல்லா விதமான விசுவாச அறிக்கையினுடைய நோக்கத்தையும் பயன்பாட்டையும் சரியாக சுருக்கிக் கூறுகிறது. அகஸ்டின் இங்கே சுட்டிக்காட்டியதுபோல, கிறிஸ்தவத்தினுடைய மைய போதனைகள் வேதவாக்கியத்தில் இங்கும் அங்குமாக சிதறிக் காணப்படுகின்றன. அதனால், ஆதி சபைகள் வேதவாக்கியத்தினுடைய மையப் போதனைகளை விசுவாச அறிக்கைகளில் சுருக்கின. இது ஒவ்வொரு விசுவாசியும், பொதுவான என்று அவர் கூறிய நபர்கள் அல்லது எழுத்தறிவில்லாத நபர்கள் கூட வேதவாக்கியத்தினுடைய அடிப்படை போதனைகளை நிலையாக பற்றிக்கொள்ளவும் அதில் உறுதியாயிருக்கவும் முடியும் என்பதை நிச்சயப்படுத்தியது.
கண்ணோட்டம்:
இந்தப் பாடத்தில், விசுவாச கட்டுரைகளுடைய விசுவாச அறிக்கைகளை மூன்று பார்வையுடன் அணுகுவோம்.
1) தேவனைப்
பற்றிய உபதேசத்தைக் குறித்து உரையாற்றுவோம்.
2) சபையைப்
பற்றிப் பேசுவோம்.
3) இரட்சிப்பு
என்னும் தலைப்பின் கீழ் உரையாற்றுவோம்.
தேவன்:
இந்த வாழ்க்கையில் நம்முடைய நம்பிக்கை முழுவதும், நாம் சிந்திக்கிறதான நம்முடைய இரட்சிப்பு மற்றும் பாவங்களுக்கான மன்னிப்பு அனைத்தும் இவை எல்லாவற்றையும் திட்டமிட்டவரும், தம்முடைய சித்தத்தையும் நோக்கத்தையும் கொண்டுவந்தவரும், தம்முடைய திட்டத்தை நிறைவேற்றி முடிவுக்குக் கொண்டுவருகிறவருமான தேவனுக்குள் வேரூன்றியிருக்கின்றன. ஆகவே, நாம் தேவனை யார் என்று நினைக்கிறோமோ அவரிடமாக சகலமும் செல்கின்றன.
அப்போஸ்தலர்களினுடைய விசுவாச அறிக்கையில் தேவனைப் பற்றிய உபதேசத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன. முதலாவது, திரியேக தேவன் என்ற விசுவாசத்தைச் சுற்றி இந்த விசுவாச அறிக்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மற்றும் இரண்டாவதாக, இது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று தேவனுடைய வெவ்வேறு ஆள்த்துவத்தைக் குறித்த அறிக்கைகளை உருவாக்குகிறது. முதலாவது திரித்துவத்தைப் பற்றிப் பார்ப்போம்.
திரித்துவம்:
அப்போஸ்தலர்களினுடைய விசுவாச அறிக்கை மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதையும், ஒவ்வொரு பகுதியும் "நான் விசுவாசிக்கிறேன்" என்ற அறிக்கையுடன் முடிவதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். முதல் பகுதி பிதாவாகிய தேவனைக் குறித்த விசுவாசத்தைப் பற்றிப் பேசுகிறது. இரண்டாவது பகுதி, அவருடைய குமாரனும், நம்முடைய கர்த்தருமான இயேசு கிறிஸ்துவை குறித்த விசுவாசத்தைப் பற்றியது. மற்றும் மூன்றாவது பகுதி, பரிசுத்த ஆவியானவரைக் குறித்த விசுவாசத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது, மற்றும் அவருடைய செயல்மிக்க ஊழியத்தையும் பட்டியலிடுகிறது.
இது தேவன் ஒருவரே, அந்த தேவன் மூன்று ஆள்த்துவமுடையவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று அழைக்கப்படுகிறார்கள் என்ற விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதே சூத்திரத்தை நாம் மத்தேயு 28:19 பகுதியில் கண்டுகொள்ளலாம், அங்கே இயேசு இந்த கட்டளையை சீஷர்களுக்கு வழங்கினார். “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, (மத்தேயு 28:19). இங்கே, அப்போஸ்தலர்களினுடைய விசுவாச அறிக்கையில் காணப்படுவதுபோல, இந்த மூன்று நாமங்களும் ஒன்றாகவும் சமமாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது சொல்வது என்னவென்றால், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் தனித்துவமான ஆள்த்துவமுடையவர்களாயிருந்தாலும், அவர்கள் ஒரே தேவனாயிருக்கிறார்கள்.
அப்போஸ்தலர்களினுடைய விசுவாச அறிக்கையானது குறிப்பாக "திரித்துவம்" என்ற வார்த்தையை குறிப்பிடவுமில்லை. ஆனால், இந்த விசுவாச அறிக்கையின் நோக்கம் நாம் நம்பும் காரியங்களின் சுருக்கமாக இருக்க வேண்டுமே தவிர, இது விசுவாச அறிக்கையினுடைய விரிவுரை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் சபையின் வழிபாட்டு முறைகளில் இது பயன்படுத்தப்பட்டபோது, தேவனுடைய இந்த மூன்று ஆள்த்துவங்களைப் பற்றி இவ்விதமாகக் குறிப்பிடுவது, திரித்துவத்தின் மையக்கருத்தைக் குறிப்பதற்கே என்று சபையிலுள்ள ஒவ்வொருவரும் அறிந்திருந்தார்கள்.
தேவன் மூன்று நபர்களாக, ஆனால் ஒரே சத்துவமுடையவராக இருக்கிறார்:
நபர் என்று சொல்லும்போது, ஒரு தனித்துவமான, சுய விழிப்புடைய ஆள்த்தன்மையுடையவர் என்று நாம் அர்த்தப்படுத்துகிறோம். சத்துவம் என்று சொல்லும்போது, தேவனுடைய அடிப்படை இயல்பு அல்லது அவர் கொண்டிருக்கிற சாரம் என்பதை நாம் குறிப்பிடுகிறோம். உண்மையில், திரித்துவம் என்ற கருத்தானது மனிதர்கள் கிரகிப்பதற்கு மிகவும் கடினமான ஒரு காரியமாகும். தேவனுடைய இருப்பு மற்றும் இயல்பு என்பது நம்முடைய அனுபவ எல்லைக்கு மிகவும் அப்பாற்பட்டவை அதாவது அவரை கற்பனை செய்வது நமக்கு கடினமானது. இருந்தாலும், திரித்துவம் என்பது கிறிஸ்தவத்தினுடைய மிக முக்கியமான தனித்துவமான விசுவாசங்களுள் ஒன்று. திரித்துவம் என்பது நீங்கள் வேதாகமத்தை முழுமையான விதத்தில் வாசிக்கும்போது அறிந்துகொள்ளும் ஒன்று. தங்களுடைய தனித்துவமிக்க ஆள்த்துவத்தில், பிதா முழுமையாக தேவனாக இருக்கிறார். குமாரனும் முழுமையாக தேவனாக இருக்கிறார், மற்றும் ஆவியானவரும் முழுமையாக தேவனாக இருக்கிறார் என்பதை நீங்கள் கண்டு அறிந்துகொள்கிறீர்கள்.
தி-ரி-த்-து-வ-ம் என்ற வார்த்தையானது வேதவாக்கியத்தில் இல்லை, ஆனால் அதைப் பற்றிய கருத்து வேதவாக்கியத்தில் இருக்கிறது. தேவன் ஒருவரே என்றும் தேவத்துவத்தில் உள்ள பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியும் தேவனாக இருக்கிறார்கள் என்றும் வேதம் போதிக்கிறது. இது தேவன் திரியேக தேவனாயிருக்கிறார் என்பதை உறுதி செய்கின்றது. எனவே, தேவன் ஒரே சத்துவமுடையவராயிருக்கிறார் என்று நாம் சொல்லும்போது, தேவன் ஒருவரே என்கிற வேதாகம சத்தியத்தை நாம் பாதுகாக்கிறோம் மற்றும் மூன்று தனித்த ஆள்த்தன்மையுடையவர்கள் எவ்வாறு ஒரே தேவனாக இருக்கிறார்கள் என்பதை விளக்குவதற்கு நாம் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். நாம் பயன்படுத்தும் சத்துவம் என்ற வார்த்தையானது, இந்த மூன்று ஆள்தன்மையுடையவர்களும், பொதுவாக ஒருவருக்கொருவர் மற்றவர்களுடன் முற்றிலுமாக பகிர்ந்துகொள்கிறார்கள், பிதாவைச் சார்ந்தது எதுவோ அது குமாரனையும் சாரும் அதைப்போலவே அது ஆவியானவரையும் சாரும், மேலும் தேவன் மூன்று ஆள்த்தன்மையுடையவராயிருக்கிறார் என்று நாம் சொல்லும்போது, வேதாகம சத்தியமான பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் ஒருவருக்கொருவர் தனித்துவமானவர்கள் என்பதை நாம் பாதுகாக்கிறோம். அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுகிற, ஒருவரையொருவர் தொடர்புகொள்கிற, ஒருவருக்கொருவரான உறவுமுறையில் இணைக்கப்பட்ட தனித்தனி நபர்கள் ஆவார்கள். பல வழிகளில், திரித்துவம் என்ற கருத்து ஒரு பெரிய மறைபொருள் ஆகும். ஆனால், இது அசாதாரணமான நம்முடைய தேவனுடைய இயல்பின் மீதான வேதாகமத்தினுடைய பல போதனைகளின் மிகத் துல்லியமான சுருக்கமும் ஆகும்.
பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று நபர்களை நாம் ஆராதிக்கிறோம், ஜெபிக்கிறோம் என்றாலும், ஒரே தேவனை மட்டுமே வணங்குகிறோம் என்பதையும் இது விளக்குகிறது. இதற்கு அப்பால், தேவத்துவத்தில் உள்ள எல்லா நபர்களுக்கும் சரியான கனத்தைக் கொடுக்க இது நமக்கு உதவுகிறது. திரித்துவத்தில் வைக்கின்ற விசுவாசமானது கிறிஸ்தவத்தினுடைய மற்ற அநேக கருத்துக்களுக்கு அடித்தளமாகும் அதாவது வரலாற்று கிறிஸ்தவத்தை இந்த கருத்து இல்லாமல் கற்பனை செய்வது கடினமானது. அப்போஸ்தலர்களினுடைய விசுவாச அறிக்கையில் காணப்படுகிற தேவனைப் பற்றிய உபதேசத்தைப் பார்த்த வண்ணமாக, ஒருவரிலிருந்து ஒருவரை வேறுபடுத்திக் காட்டும் வெவ்வேறு ஆள்த்துவங்களைப் பற்றிய அறிக்கைகளைப் பரிசீலனை செய்வோம்.
நபர்கள்:
பிதாவைப் பொறுத்தவரை, விசுவாச அறிக்கையானது, அவர் சர்வவல்லமையுள்ளவர் என்ற பண்பைக் கூறுகிறது மற்றும் அவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் என்ற வரலாற்று உண்மையைக் குறிப்பிடுகிறது.
இந்த விசுவாச அறிக்கையானது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிச் சொல்வதற்கு அநேக காரியங்கள் உள்ளன. இது அவருடைய இயற்பண்புகளைப் பற்றி விவரிக்கவில்லை என்றாலும், இது அவருடைய உலக வாழ்க்கை மற்றும் ஊழியத்தைக் குறித்ததான பல விவரங்களைக் குறிப்பிடுகிறது. இந்த விசுவாச அறிக்கையானது இயேசுவினுடைய அவதாரம், மனிதக் குழந்தையாகப் பூமிக்கு அவரது வருகை மற்றும் உண்மையான மனித வாழ்க்கையை வாழ்தல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. மேலும் இது அவருடைய பாடு, மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் பற்றிப் பேசுகிறது. இந்த அடிப்படை உண்மைகளை அவைகள் சம்பவித்திருந்த போதிலும் அவிசுவாசிகள் மறுதலிக்கின்றனர் என்று வேதவாக்கியங்கள் சொல்கின்றன. இறுதியாக, விசுவாசிகளுக்கு நித்தியமான, ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வழங்கியும், பொல்லாதவர்களை தண்டித்தும் கடைசி நாளில் இந்த மனித இனம் முழுவதையும் நியாயம் விசாரிப்பவராக இயேசுவின் பங்கைப் பற்றி இந்த விசுவாச அறிக்கை குறிப்பிடுகிறது.
கன்னி மரியாளின் வயிற்றில் இயேசு உருவாகும்படி பரிசுத்த ஆவியானவர் செய்தார் என்று ஆவியானவரைக் குறித்து இந்த விசுவாச அறிக்கை சொல்கிறது அதைவிட இது தேவனுடைய தனித்துவமான ஆள்த்துவத்தை அவருடைய இருப்பின் மூலம் உறுதிப்படுத்துகிறது. எப்படியிருந்தாலும், மறைமுகமாக, இந்த விசுவாச அறிக்கையானது பரிசுத்த ஆவியானவரைச் சபையுடனும், நமது இரட்சிப்பின் அனுபவத்தை தற்சமயத்துடனும் வருங்காலத்துடனும் இணைக்கிறது. இப்பொழுது தேவனைக் குறிக்கும் இறையியல் கூற்றுக்களை நாம் குறிப்பிட்டுள்ளோம், சபையைக் குறித்து அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை பேசும் வழிகளைச் சுட்டிக்காட்ட நாம் தயாராக உள்ளோம்.
சபை:
அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கையானது, சபையை இருவேறு சொற்றொடர்களால் விவரிக்கிறது. முதலாவது, சபையானது பரிசுத்தமான உலகளாவிய ஒன்றாக அழைக்கப்படுகிறது. இரண்டாவது, சபையானது பரிசுத்தவான்களின் ஐக்கியம் என்று விவரிக்கப்படுகிறது. இந்த சொற்றொடர்கள் பல்வேறு வழிகளில் விளக்கப்பட்டு வருகிறது, இந்த பரிசுத்தமான உலகளாவிய சபையானது ரோம கத்தோலிக்க சபையைக் குறிக்கவில்லை மாறாக, சபை அதன் சகல அங்கங்களுடன் உலகளாவிய அளவில் உள்ளதை நாம் சுட்டிக்காட்டுவோம். "நான் சபையை விசுவாசிக்கிறேன்" என்று விசுவாச அறிக்கை சொல்லும்போது, நாம் நமது விசுவாசத்தை சபையின் மீது வைக்கிறோம் என்பது இதன் அர்த்தமல்ல, மாறாக, சபை என்பது பரிசுத்தமானதும் பரிசுத்தமாக்கப்பட்டதும், என்கிற நம்பிக்கையை நாம் உறுதிப்படுத்துகிறோம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அங்கே பரிசுத்தவான்களின் ஐக்கியம் அதாவது விசுவாசிகளின் ஐக்கியம் இருக்கிறது என்பதை நாம் உறுதிப்படுத்துகிறோம். இந்த உணர்வுகளின்படி வரலாற்று கிறிஸ்தவம் சபையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
பங்கேற்பு:
நான் "பரிசுத்த சபையை விசுவாசிக்கிறேன்" என்று விசுவாச அறிக்கை சொல்லும்பொழுது, இது சபையில் பங்கேற்பதில் உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. எபிரெயர் 10:25 இல் நாம் வாசிக்கிறது போல, “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் இருப்போம்” (எபிரெயர் 10:25). முதல் நூற்றாண்டில் கூட, விசுவாசிகள் என்று சொல்லிகொண்ட சிலர் ஆராதனைக்குரிய இடமாக, போதனை செய்வதற்குரிய மற்றும் ஐக்கியம் கொள்வதற்குரிய இடமாக, சபையில் கூடுவதை புறக்கணிக்க விரும்பினர். ஆனால் வேதவாக்கியம் கற்பிப்பது என்னவென்றால் சபையானது கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமானதும் அவசியமானதுமான ஒன்றாகும்.
இரட்சிப்பு:
இரட்சிப்பின் அனுபவம் திரியேக தேவனாகிய பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் மூலமாகத் தான் நமக்குள் கடந்து வருகிறது என்பதையும் எந்தவொரு மனிதக் கட்டமைப்பிலிருந்தோ அல்லது மனித அமைப்பிலிருந்தோ வரவில்லை என்பதையும் விசுவாச அறிக்கையானது ஸ்தாபிக்க விரும்புகிறது. பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியானவராகிய தேவன் யார் என்று அறிந்துகொள்வது, நமது பாவங்களை அறிக்கையிட்டால் நாம் இரட்சிக்கப்படுவோம் என்ற வாக்குத்தத்தம் மற்றும் அழைப்பை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. விசுவாச அறிக்கையில் காணப்படுகிற கடைசி மூன்று விசுவாச விதிகளும் இரட்சிப்பின் அம்சங்களைக் கையாள்கின்றன. விஷேசமாக, அவைகள் பாவத்திற்கான மன்னிப்பு, சரீரத்தின் உயிர்த்தெழுதல் மற்றும் நித்திய வாழ்வு ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.
பாரம்பரிய முறைப்படுத்தப்பட்ட இறையியலில், உயிர்த்தெழுதலும், நித்திய வாழ்வும், கடைசி காலத்தைக் குறித்த உபதேசமாகிய கடைசிக் கால இயல் என்னும் தலைப்பின் கீழ் கையாளப்படுகிறது. ஆனால் எளிமைக்காக, நாம் இரட்சிப்பு என்னும் தலைப்பின் கீழ் மட்டுமே உரையாற்றுவோம். அனைத்து கிறிஸ்தவர்களும் பாவத்திற்கான மன்னிப்பானது இயேசு கிறிஸ்துவின் பரிகாரக் கிரியை மூலமாகத்தான் கிடைக்கிறது என்பதை விசுவாசிக்கிறார்கள். நமது பாவங்களை நாம் அறிக்கையிட்டு, நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான் (யோவான் 3:16-18).
நித்திய ஜீவன் என்பது எல்லா விசுவாசிகளுக்கும் உரியது. ஒரு விதத்தில் பார்க்கும்போது, நமது ஆத்துமாக்களுக்கு புதிய ஜீவன் கொடுக்கப்படுகிறது மற்றும் அது ஒருபோதும் மரிப்பதில்லை என்பதால், நாம் விசுவாசத்திற்குள் வரும் தருணத்தில் தானே இது துவங்குகிறது. ஆனால் விசுவாச அறிக்கையால் உறுதிப்படுத்தப்பட்ட நித்திய ஜீவனுக்குரிய இயல்புத்தன்மையானது சிலநேரங்களில் நவீன கிறிஸ்தவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. விசேஷமாக, விசுவாச அறிக்கை சரீர உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசுகிறது. சிலநேரங்களில், விசுவாச அறிக்கையானது இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிப் பேசுகிறது என்று நினைத்து கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள். ஆனால், அப்படியல்ல. இயேசுவினுடைய உயிர்த்தெழுதல் விசுவாச அறிக்கையின் முற்பகுதியிலேயே "மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்" என்ற வார்த்தையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசுவாசத்தின் விதியானது மீண்டுமாக சொல்லப்படவில்லை. மாறாக, விசுவாச அறிக்கையானது மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைப் பேசும்போது, சகல ஜனங்களும் நியாயத்தீர்ப்பின் நாளிலே உயிர்த்தெழுவார்கள், மற்றும் அவர்கள் சரீரமற்ற ஆவிகளாக அல்லாமல் சரீரமுடைய சிருஷ்டிகளாக அவர்களுடைய நித்திய விதிகளுக்கு நேராக செல்வார்கள் என்ற வேதாகம போதனைகளைக் குறிப்பிடுகிறது. இது வேதவாக்கியத்தின் நிலையான போதனை, மற்றும் ஆயிரக்கணக்கான வருடங்களாக சபைகளில் காணப்படுகிற விசுவாசத்தின் ஒரு விதியாக உள்ளது. யோவான் 5:28-29 இல் இயேசு போதித்தது போல, விசுவாச அறிக்கையின் இரட்சிப்பைப் பற்றிய கூற்றானது வேதவாக்கியத்தில் தெளிவாக போதிக்கப்பட்டிருக்கிறது மற்றும் வேதாகம சபைகளால் எப்பொழுதும் அரவணைக்கப்பட்டிருக்கிறது.
அப்போஸ்தலர விசுவாச பிரமாணத்தின் வேத குறிப்புரைகள்:
வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன்.( ஆதியாகமம் 1:1, யாத்திராகமம் 31:17). அவருடைய ஒரே குமாரனாகிய, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். (எபிரெயர் 5:5, 1யோவான் 4:9) அவர் பரிசுத்த ஆவியினாலே கன்னிமரியாளிடத்தில் உற்பவித்துப் பிறந்தார் (ஏசாயா 7:14, மத்தேயு 1:20-23); பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு (ஏசாயா 53:4-5 யோவான் 19:18), பாதாளத்தில் இறங்கினார் (எபேசியர் 4:8-10) மூன்றாம் நாள் மரித்தோரிடத்திலிருந்து எழுந்தருளினார் (யோவான் 20:25-29, அப்போஸ்தலர் 2:32) பரமண்டலத்துக்கேறி (லூக்கா 24:51) சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் (1 பேதுரு 3:22). அவ்விடத்திலிருந்து உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருவார் (1 பேதுரு 4:5).
பரிசுத்த ஆவியையும் விசுவாசிக்கிறேன் (யோவான் 14:26). பொதுவாயிருக்கிற பரிசுத்த சபையும் (அப்போஸ்தலர் 9:31), பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும் (அப்போஸ்தலர் 2:42-44), பாவ மன்னிப்பும் (கொலோசெயர் 1:14), சரீர உயிர்த்தெழுதலும் (மத்தேயு 22:31-32) நித்திய ஜீவனும் உண்டென்று விசுவாசிக்கிறேன் (யோவான் 5:28-29), ஆமென்.