Sermons

யோவானின் எழுத்துக்களில் சிலுவை

பழைய காலத்தில் சிலுவை மரணம் என்பது அவமானத்தின் சின்னமாகும். ஆனால் யோவானின் எழுத்துக்களில் அது மகிமையின் வெற்றி சின்னமாக பார்க்கப்படுகிறது. யோவான் சிலுவையை அவமானம் மற்றும் பாடுகள் என்று காட்டாமல், மகிமையின் நிலையை இங்கே காட்டுகிறார். யோவான் 12:23–33-ல், இந்த வசனங்களில் இயேசு தனது சிலுவை மரணத்தை எவ்வாறு விளக்குகிறார் என்பதற்கான ஒரு விளக்கம்.

1.சிலுவை மரணம் - மகிமையை வெளிப்படுத்துகிறது:

யோவான் 12:23 இல், "மனுஷகுமாரன் மகிமைப்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று இயேசு கூறுகிறார். இதைக் குறித்து ஏசாயா ஏற்கனவே தீர்க்கதரிசனம் கூறியிருக்கிறார் இதோ, என் ஊழியன் ஞானமாகச் செயல்படுவான்; அவன் உயர்த்தப்பட்டு, மேன்மைப்படுத்தப்பட்டு, மிகவும் உயர்த்தப்படுவான்(ஏசாயா 52:13). "அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்."(யோவான் 13:31) தமக்கு வரவிருக்கும் பாடுகளாலும் மரணத்தாலும், தாமும் பிதாவாகிய தேவனும் மகிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.

ஒரு ராஜாவுக்கு, மகிமை என்பது தங்க கிரீடம்; இயேசுவுக்கு, மகிமை என்பது சிலுவை அவர் சிலுவை மரணத்தை அவமானத்தின் ஒரு தருணமாக அல்ல, அதை அவரது மிகப்பெரிய சாதனையாகக் கருதுகிறார். தேவனுடைய மகிமை பூமிக்குரிய அதிகாரத்தில் இல்லை, மாறாக இயேசுவின் தியாக மரணத்திலும் அதைத் தொடர்ந்த உயிர்த்தெழுதலிலும் உள்ளது. இயேசுவின் மகிமையானது, அவருடைய "பணியுடன்" பிணைக்கப்பட்டுள்ளது. தாம் பிறந்து வந்ததற்கான மாபெரும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்யும்போது, ​​அவர் மகிமைப்படுத்தப்படுகிறார். ஒரு பரிபூரணமான இறுதி இலக்கை அடைவதே மிகச்சிறந்த மகிமையின் வடிவமாகும். யோவான் 17:4 -இல் அவர் இவ்வாறு கூறுகிறார்: “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.” அவரது மகிமை பிதாவின் சித்தத்தின்மீது அவருக்குள்ள அர்ப்பணிப்பு முழுமையானது, என்பதை அவர் நிரூபித்தார்.

கிறிஸ்து பேதுருவைப் பார்த்து கூறியது: யோவான் 21:19-இல் “இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.”

2. இயேசு கிறிஸ்து சிலுவையில் எப்படி மகிமைப்பட்டார்?    

சங்கீதம் 19:1 இல் கர்த்தர் ஒரு படைப்பு நிறைவேற்றி அதில் மகிமைப்பட்டார். அதேபோல மனிதனை புது சிஷ்டியாக அவர் உருவாக்குவது மூலமும்   மகிமைப்பட போகிறேன் என்பதை இங்கே கூறுகிறார்.  2 கொரிந்தியர் 5:17-ல் “ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் புதிய சிருஷ்டியாயிக்கிறான். யாத்திராகமம் 15:1 இல் “அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.” பார்வோனின் சேனைகளை முறியடித்து வெற்றி பெற்ற பிறகு, இஸ்ரவேலர்கள் கர்த்தர் மகிமைப்பட்டார் என்று பாடுகிறார்கள். அதேபோல, இயேசு கிறிஸ்துவும் எதிரியான சாத்தானை சிலுவையிலே வெற்றி பெறுவது மூலமும், இங்கே மகிமைப்படுகிறார். 1 இராஜாக்கள் 8:11 இல் “கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று என்று கூறுகிறது. இன்று அவருடைய ஆலயமாகிய மனிதர்களை (1 கொரிந்தியர் 6:19) அவருடைய சிலுவை மரணத்தின் மூலம் விசுவாசிப்பது மூலம் அவர் மகிமையாய் நிரப்புகிறார்.

விதையின் உவமை:

தாம் ஏன் இறக்க வேண்டும் என்பதை விளக்க இயேசு ஒரு உவமை  பயன்படுத்துகிறார், "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்"(யோவான் 12:24). இயேசு சிலுவையை தனது வாழ்க்கையின் முடிவாகக் கருதவில்லை, மாறாக தனது வாழ்க்கையின் ‘நடவு என்று பார்த்தார். உலகிற்கு, புதைக்கப்பட்ட விதை ஒரு இறுதிச் சடங்காகத் தெரிகிறது. தோட்டக்காரருக்கு, புதைக்கப்பட்ட விதை ஒரு தொடக்கமாகும். யோவான் 15:1-ல் “நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.

ஒரு விதையின் "மகிமை" என்பது அதன் மேல் ஓட்டில்(outer Shell) அமைந்திருப்பதில்லை; மாறாக, அது விளைவிக்கும் அறுவடையிலேயே அமைந்திருக்கிறது. மத்தேயு 9:38-ல் “ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.  மரணத்தைத் தழுவுவதன் மூலம், இயேசு ஒரு தனிநபராக இருப்பதிலிருந்து மாறி, "அனைத்து மக்களுக்கும்" வாழ்வின் ஊற்றாக உருவெடுக்கிறார்.அறுவடை செய்ய இறக்க வேண்டிய விதையைப் போல, மனிதகுலத்திற்கு நித்திய ஜீவனைக் கொடுக்க இயேசு இறக்க வேண்டும்.

ஒரு விதை மண்ணில் கிடந்து ஈரப்பதத்துடன் தொடர்பு கொள்ளும்போது, ​ அது உருமாற்றம் அடைகிறது. தனது முந்தைய நிலையை இழந்து, வேறொன்றாக, தனது முந்தைய நிலையை விட மேலான ஒன்றாக மாறுகிறது. 2 கொரிந்தியர் 5:17-ல் நாம் காண்பது: “ஆதலால், ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், அவன் புதிய சிருஷ்டியாக இருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின; இதோ, எல்லாம் புதியவைகளாயின. தியாகம் இல்லாமல் நீங்கள் "அறுவடை" (வெகுமதி) பெற முடியாது. ஒரு விதை இறக்கிறது, ஆனால் நூறு விதைகள் அதன் இடத்தைப் பிடிக்கின்றன. இயேசு ("ஒரே விதை") சிலுவையில் "நடப்பட தயாராக இருந்ததால், வரலாறு முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் நம்பிக்கையையும் நித்திய ஜீவனையும் கண்டனர்.

 3. சிலுவை மரணம் சீஷர்துவ ஊழியத்தை குறிக்கிறது:

சீஷர்கள் சுய தியாகத்துடன் வாழ வேண்டும் என்று இயேசு கற்பிக்கிறார்:இது சீஷத்துவத்தை சிலுவையின் மாதிரியுடன் இணைக்கிறது - இயேசு கிறிஸ்து தன்னுடைய மரணத்தை குறித்து முந்தைய வசனங்களில் கூறிவிட்டு, இங்கே ஊழியம் செய்பவர்களுக்கு ஒரு ஆலோசனையாக கூறுகிறார். ஊழியம் செய்கிறவர்கள் அவரைப்போல அவரை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார். இந்த விதையின் உவமையைப் போல இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

 4.சிலுவை மரணம் - உயர்த்தப்படுதலை வெளிப்படுத்துகிறது:

மோசேயால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்ட வெண்கல சர்ப்பம், புதிய ஏற்பாட்டில் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவிற்கு அடையாளமாக (யோவான் 3:14-15)-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.  இஸ்ரவேலர்கள் பாவம் செய்து முறுமுறுத்ததால்  சர்ப்பங்கள் கடித்து மரித்தனர். மோசே தேவனுடைய கட்டளைப்படி வெண்கல சர்ப்பத்தை ஒரு கம்பத்தில் உயர்த்தினார், அதைப் பார்த்தவர்கள் பிழைத்தனர் (எண்ணாகமம் 21:6-9). சர்ப்பத்தால் கடிக்கப்பட்டவர்கள் வெண்கல சர்ப்பத்தைப் பார்த்து பிழைத்தது போல, இயேசுவை விசுவாசிப்பவர்கள் பாவ மன்னிப்பும் நித்திய ஜீவனும் பெற்று பிழைக்கப்படுவார்கள் என்பதை இது உணர்த்துகிறது.

மேலும் ஏதேன் தோட்டத்தில் தேவன் ஆதமைப் பார்த்து இந்த கனியை சாப்பிட்டால் சாகவே சாவாய் என்று சொன்னார். இப்பொழுது உயர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை பார்த்தால் பிழைப்பீர்கள் என்று வேதம் சொல்கிறது. மனிதன் ஏதேன் தோட்டத்தில் இழந்ததை இப்பொழுது சிலுவையிலே பெற்றுக் கொள்கிறான். மேலும் தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் (மத்தேயு 23:12).  சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத்தாமே தாழ்த்தினார் (பிலிப்பியர் 2:5-8) என்று வேதம் சொல்லுகிறது. அதனாலே, பிதாவானவர் கிறிஸ்துவை உயர்த்துகிறது நாம் பார்க்க முடிகிறது. சிலுவையிலே மட்டுமல்ல அவர் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் (பிலிப்பியர் 2:9-11). சிலுவையில் சரீரப்பிரகாரமாக உயர்த்தப்படுவார். ஆனால் இரண்டாவதாக, இயேசு மேன்மைக்குரிய இடத்திற்கும், மகிமைக்குரிய இடத்திற்கும் உயர்த்தப்பட்டார்.

“நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்(யோவான் 12:32). “உயர்த்தப்பட்டேன்” என்பது இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது  சிலுவையில் உயர்த்தப்பட்டதைக் குறிக்கிறது. சிலுவை - இயேசு எல்லா தேசங்களிலிருந்தும் மக்களை தேவனிடம் ஈர்க்கும் இடமாகிறது. அவர் உடல்ரீதியாகச் சிலுவையின் மீது மேலே உயர்த்தப்பட்டார். ஒரு மன்னன் அரியணையில் அமர்த்தப்படுவது போல, அவருடைய அந்தஸ்தும் "மேலே உயர்த்தப்படுகிறது. அன்று சிலுவை மரத்திலே இயேசு கிறிஸ்து உயர்த்தப்பட்டார்.  அதனாலே இன்று அனேக ஜனங்களின் இருதயங்களிலே சிம்மாசனம் போட்டு அவர் உயர்ந்திருக்கிறார்.

முடிவு :

இயேசு கிறிஸ்து மகிமைப்படுவது, உயர்த்தப்படுவது அவருக்காக அல்ல, அது அவரை விசுவாசிக்கிற நமக்காக யோவான் 12: 30 இல் “இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால், சிலுவை மரணம் நம்முடைய வாழ்விலும் நன்மையும் ஆசீர்வாதத்தையும் கொடுக்கிறது. அதனால் தான் ஆண்டவர் இந்த வார்த்தையை கூறுகிறார். இன்றைக்கு சிலுவை தியானத்தை தியானிக்கிற நாம் நம்முடைய வாழ்விலே எத்தனை பேர் இந்த சிலுவை மரணத்தினால் நான் நன்மையை பெற்று இருக்கிறேன் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்று உறுதிப்படுத்த முடியும்? அதற்காக தான் இந்த தியானம், நாம் இன்றைக்கு இந்த நன்மையை கர்த்தருடைய கிருபையினால் பெற்றுக் கொள்வோம். இன்றைக்கும் சிலுவை காயத்தினால் அநேகர் சுகம் அடைகிறார்கள், இன்றைக்கும் அற்புத அடையாளங்களால் இயேசு கிறிஸ்து மகிமைப்படுகிறார்.

Loading...