Sermons

உன்னதப்பாட்டு 6 :10

"சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்?”

இங்கே சபையாகிய கிறிஸ்தவர்களின் அழகும், பிரசன்னமும், கெம்பீரமும், மகிமையும் கூறப்படுகிறது. சபை நான்கு விதத்தில் வர்ணிக்கப்படுகிறது.

"சந்திரனைப்போல் அழகும்”  சந்திரன் மகிமையானதாய் யோபு 31 : 26 -ல் பார்க்கிறோம். இது உலகத்திற்கு இருளில் வெளிச்சம் கொடுக்கவும் (சங் 136 : 9), காலங்களை அறிந்து கொள்ளவும் (சங் 104 : 19) படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சபை கர்த்தருடைய படைப்பாகிய சந்திரனின் அழகோடு ஒப்பிடப்படுகிறது.

"சூரியனைப்போல் பிரகாசமும்”   வேதம் இயேசு கிறிஸ்துவைத்தான் சூரியன் என்று வர்ணிக்கிறது (மல் 4 :  2, மத் 17 : 2, வெளி 21 : 23). வேதம் கர்த்தருடைய பிரசன்னம், அழகு, மகிமை போன்றவற்றை சூரியனோடு ஒப்பிடுகிறது. ஆனால் இந்த வசனத்தில் சபையை சூரியனுடைய பிரகாசத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறதை காணலாம். அதாவது, உலகமே பாவம் என்கிற இருளில் இருக்கும் பொழுது, இயேசு கிறிஸ்து என்ற பிரகாசத்தை (வெளிச்சத்தை) பெற்றுக்கொண்ட சபை, சூரியனை போல் பிரகாசமாக ,ருக்கிறது என்று கூறப்படுகிறது. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி (யோவான் 1: 9) என்ற வசனத்தின் படி சபை கிறிஸ்துவினால் பிரகாசிக்கிறது.

 "கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய்”  கொடிகள் பறக்கும் படை என்பது, இயேசு கிறிஸ்து சபையை, போர்களில் வெற்றி பெற்று கெம்பீரமாக கொடியை ஏந்திக்கொண்டு வரும் படைக்கு ஒப்பிடுகிறார். போர்களில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் கொடியை மேல் நோக்கி பறக்க விடுவார்கள். இது வெற்றியின் அடையாளத்தை எடுத்துக் கூறுவதாக அமையும். கெடியுமானவள் என்பது கெம்பீரத்தை குறிக்கும். இன்று சபை யாரோடு போர் செய்கிறார்கள்? வேதம் கூறுவது போல், நமது எதிராளியாகிய சாத்தானோடு போர் செய்கிறார்கள். எபே 6 : 11-18 -ல் சொல்லப்பட்டிருப்பது போல நாம் கர்த்தரின் சத்துவத்தின் வல்லமையில் பலப்பட்டு, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொண்டு பிசாசின் கிரியைகளோடு எதிர்த்து ஜெயம் பெறுகிறவர்களாக இருக்க  வேண்டும். சபையை ஆவிக்குரிய யுத்தத்திற்கு பழக்குவிக்கிறவரும் அவரே (சங் 144 : 1). எனவே யோசுவா 1 : 9 -ல் சொல்லப்பட்டிருப்பது போல, பலங்கொண்டு திடமனதாயிருக்க வேண்டும். இதை தான் கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கிறார். இப்படி ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயம் பெறுகிற சபையாரைப் பார்த்து இயேசு கிறிஸ்து கூறுகிறதாவது, ஒரு போர் சேனை யுத்தம் செய்து வெற்றிப் பெற்று எவ்வளவு வீரமாய் வருகிறதோ, அதேபோல் என்னுடைய சபையாகிய நீங்கள் இருக்கிறீர்கள் என்று கூறுகிறார். எனவே நீங்கள் என் பார்வைக்கு அழகானவர்கள், செம்மையானவர்கள், பலமுள்ளவர்கள், உறுதியானவர்கள் என்று இந்த வசனத்தின் மூலம் கிறிஸ்து பேசுகிறார்.

"அருணோதயம்போல்”  அருணோதயம் என்பது இயேசு கிறிஸ்துவை  குறிப்பிடுகிறது (லூக்கா 1:79, ஓசியா 6:3). இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று நாம் ஏசாயா புஸ்தகத்தில் பார்க்கிறோம். அதேபோல் இந்த உலகம் இருளில் இருக்கிறப்பொழுது, காலை வெளிச்சமாகிய (இயேசு கிறிஸ்து) அருணோதயம் சபைக்குள் வந்ததை து குறிப்பிடுகிறது. ப்படி கிறிஸ்துவினால் நன்மைப் பெற்ற சபையைப் பார்த்து ஆச்சரியத்தோடு கேட்கிற ஒரு கேள்வி தான் சூரிய, சந்திரனைப் போல வெளிச்சமும், வீரத்தையும், அருணோதயம் போல  காணப்படுகிற இவள் யார்? என்பதாக ஒரு ஆச்சரியக் கேள்வி சபையைப் பார்த்து இங்கே எழுப்பப்படுகிறது.

அன்பானவர்களே! நாமும் கூட இன்று உண்மையாக நீதியின் சூரியனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்குள் கொண்டிருப்போமானால், நாம் இந்த உலகத்திற்கு ஒளியாக இருந்து, மற்றவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கிறவர்களாக இருக்க முடியும். நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக இருந்து, இயேசு கிறிஸ்துவை முழுமையாக நமக்குள் கொண்டிருப்போமானால், இந்த உலகம் நம்மைப் பார்த்து இந்த கேள்வியை நிச்சயமாக கேட்கும். இவர்கள் யார்? இவர்கள் யார் என்பதாக புறஜாதியார் மத்தியிலே நம்மைப் பார்த்து ஒரு மிகப்பெரிய கேள்வி ஆச்சர்யமாக எழும்புகிறது. நாம் அதற்குத் தகுதி பெறுவோமா, சிந்தித்துப் பார்ப்போம்.

இந்த சிறப்பு உங்களிடம் இருக்கிறதா?

குறிப்பு வசனம்: நீதி 4 : 18, சங் 72 : 5, 17, மல் 4 : 2, யோபு 31: 26, ஆதி 37: 9

Loading...