Sermons

உன்னதப்பாட்டு 6 : 9

"என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.”

நாம் இந்த வசனத்தைப் புரிந்துக் கொள்வதற்கு முந்தின வசனத்தையும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும். அங்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மூன்று கூட்டத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால் இந்த வசனத்தில் "என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே” என்று சபையை ஒருமையில் கூறுகிறார். சபையை கிறிஸ்து புறா என்று பேசுகிறார். இதை  உன் 4 : 1 -ல் பார்த்திருக்கிறோம். அதே வேளையில் சபையை உத்தமியே என்று கூறுகிறார். யார் உத்தமர்கள்?  கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிறவர்கள் (சங்கீதம் 119: 1), நீடிய சாந்தமுள்ளவன், தன் மனதை அடக்குகிறவன்  உத்தமன் (நீதிமொழிகள் 16:32), பொறுமையுள்ளவன் உத்தமன் (பிரசங்கி 7:8), கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.(2 கொரிந்தியர் 10:18) இவர்கள் தான் உத்தமர்கள் என்று வேதம் கூறுகிறது. உத்தமி என்பவள் தன் நேசருக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்தவள். மேலும் இங்கு சபை என்று சொல்கிற பொழுது எல்லாக் கிறிஸ்தவர்களும் அதற்குள் அடங்கி ஒருமையில் வருகிறார்கள். எபே 4 : 4-6 -ல் சபையாகிய எல்லாருக்குள்ளும் ஒரே நம்பிக்கை, ஒரே சரீரம், ஒரே ஆவி, ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்தானம் இருக்கிறபடியால், நாம் எல்லோரும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாய் இருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது.

"அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்”  நம் எல்லோருக்கும் தாய் என்பது எருசலேம் (கலா 4 : 26). இது எதைக்குறிக்கிறது என்றால், நாம் வாக்குத்தத்தத்தின்படி பிறந்த சுயாதீனமுள்ள ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் என்பதை இந்த பகுதி நமக்கு விளக்கிக் காட்டுகிறது. கலா 4 : 21-27 -ல் ஈசாக்கு மற்றும் இஸ்மவேலின் வரலாறுகளால் இது விளக்கப்படுகிறது. இன்று கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள், பரிசுத்த ஆவியானவரால் பிறந்து, மறுபிறப்பினாலும், உண்மையான விசுவாசத்தினாலும் ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின்படி ஆபிரகாமின் உண்மையான சந்ததியினராக்கப் படுகிறார்கள். கலா 4 : 26 -ல் எருசலேமோ சுயாதீனமுள்ளவள் என்று கூறப்பட்டிருக்கிறது. நாம் ஆவிக்குரிய சுயாதீனமுள்ள இஸ்ரவேலர்களாக இருக்கிறோம். நம் எல்லாருக்கும் தாய் சுயாதீனமுள்ள எருசலேம்.

"அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்” ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின்படி, ஆவிக்குரிய இஸ்ரவேலராக நாம் மறுபிறப்பினாலும், உண்மையான விசுவாசத்தினாலும் பெற்றுக்கொண்ட இந்த உறவில் நாம் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்கிகும் பொழுது, சபையாகிய நாம் இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அருமையானவர்களாக இருக்கிறோம்.

"குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.”  அதாவது மணவாட்டி அல்லாத மற்றவர்கள் சபையைப் பார்த்து சொல்லுகிறதாவது, நீங்கள் அதிர்ஷ்டசாலிகள், நாங்கள் ராஜஸ்திரீகளாக, மறுமனையாட்டியாக இருந்தாலும், உங்களை கிறிஸ்து மணவாட்டியாக தேர்ந்தெடுத்திருக்கிறார். நீதி 31 : 30-,ல். "சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்." கர்த்தருக்கு பயந்து அவர் வழியில் நடப்போமானால், அதுவே அவருடைய பார்வையில் அழகாக இருக்கிறது. ஒருநாள் அதற்கான பலன் நமக்குக் கிடைக்கும், எல்லோராலும் புகழப்படுவோம். இந்த உலகம் பார்க்கிற பிரகாரம் ஆண்டவர் ஒரு மனிதனைப் பார்ப்பதில்லை, அவர் இருதயத்தைப் பார்க்கிறார். (1சாமு 16 : 7, 1பேதுரு 3 : 3,4). சபையாகிய நாம் உண்மையிலே அதிர்ஷ்டசாலிகள் தான், ஏனென்றால் நாம் கிறிஸ்துவின் மணவாட்டியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம்.

அன்பானவர்களே! விசுவாசத்தில் சோர்ந்து போகாதிருங்கள், விசுவாசத்தினால் வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஒவ்வொருவருமே பாக்கியவான்கள் தான்.

நீங்கள் வாக்குத்தத்தத்தின்படி பிறந்த ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் என்பதை உணர்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  யோவான் 10: 6, யோவான் 17 : 22, கலா 4: 26

Loading...