Sermons

உன்னதப்பாட்டு 6 : 6

"உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.”

இயேசு கிறிஸ்து சபையைப் பற்றி வர்ணித்து பேசிக் கொண்டிருக்கிறார். இந்த வசனத்தில் சபையைப் "பற்களோடு” ஒப்பிட்டுப் பேசுகிறார். எனவே நாம் வேதத்தின் அடிப்படையில் பற்களுடைய சிறப்பு செயலைக் குறித்து பார்க்க வேண்டும். பொதுவாக பற்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவை நன்றாக அரைத்துக் கொடுக்கிறது. அதேபோல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புன் சிரிப்பைக் குறிக்கிறது.

(1) வேதத்தில் பற்கள் எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது, ஆமோஸ் 4 : 6 -ல் பற்களின் ஓய்வு உணவு பற்றாக்குறையை குறிப்பிடுகிறது. ஆனால்  இந்த வசனத்தில்  பற்கள் இரட்டை குட்டியீன்ற ஆட்டு மந்தைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. அதாவது செழிப்பைக் குறிக்கிறது. பற்களின் செழிப்பு என்பது உணவு பற்றாக்குறை இல்லாத ஆசீர்வாதத்தை குறிக்கிறது. அதாவது, இயேசு கிறிஸ்துவினால்  ஒவ்வொரு நாளும் ஆவிக்குரிய மன்னா சபைக்கு கொடுக்கப்பட்டு, கிறிஸ்துவின் சபை செழிப்பாக காணப்படுகின்றது.

 (2) ஆதி 49 : 12 -ல் யூதா கோத்திரத்தின் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  1 பேதுரு 2 : 3 -ல் பால் கர்த்தருடைய வசனத்தைக் குறிக்கிறது. அதாவது, சபை வசனத்தால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கும் என்பதை இந்த பகுதி குறிக்கிறது.

இந்த வசனத்தில் பற்கள் மலடாயிராத ஆட்டு மந்தையோடு ஒப்பிடப்படுகிறது. அதாவது சபையினுடைய பற்கள் (ஆவிக்குரிய மன்னா, ஆவிக்குரிய ஆசீர்வாதம் மற்றும் வசனத்தால் பரிசுத்தமாக்கப்படுதல்) தனக்குரிய ஆவிக்குரிய தன்மைகளைப் பெற்று மற்றவர்களுக்கும் கனி கொடுக்கிறவர்களாக இருக்கிறது என்பதை இந்த வசனத்தின் மூலம் புரிந்துக்கொள்ளலாம்.

மேலும் பற்கள் புன்சிரிப்பைக் காட்டுகிறது. அதாவது சபை கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க வேண்டும் (பிலி 4 : 4) என்ற வார்த்தையின்படி கர்த்தரோடிருக்கிற சபை பாடுகளின் மத்தியிலும் தேவ அன்பினால் சந்தோஷமாகவும், திடனாக இருப்பதையும் காண்பிக்கிறது.

அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவினால் சபை ஆவிக்குரிய மன்னாவைப் பெற்று, அந்த ஆசீர்வாதத்தில் நிலைத்திருந்து, சத்திய வசனத்தால் பரிசுத்தமாக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் கனி கொடுக்கிறவர்களாக இருக்கிறது என்பதைக் கிறிஸ்து கூறுவதாக இந்த வசனம் காட்டுகிறது. மேலும் இவ்வசனம் உன்னதப்பாட்டு 4: 2 லும் சொல்லப்பட்டு, சபையின் பரிசுத்தத்தையும், அதனால் இயேசு கிறிஸ்துவுக்கு கிடைக்கும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்துகிறது.

நீங்கள் சத்திய வசனத்தில் நிலைத்திருந்து கனி கொடுக்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  உன் 4: 2, சங் 78: 52, சங் 79: 13, சங் 95: 7, சங் 113: 9, ஆதி 49: 12.

Loading...