"உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது;உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.”
சபை இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து, அவருடைய அன்பால் வெற்றி பெறுவதையும், மணவாளனுக்காக தன்னை பரிசுத்தமாகவும், அர்ப்பணிப்போடும், ஆவிலே பெலனடைந்து, மகிமை பொருந்தியவர்களாக சபை காணப்படுகிறது என்று கிறிஸ்து கூறுகிறார்.
"உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது” இது இயேசு கிறிஸ்து சபையின் மீது வைத்துள்ள அன்பின் வார்த்தை ஆகும். மனுக்குலத்தின் கண்கள் எப்பொழுதும் அவரை நோக்கி இருப்பதினால், அந்த சந்தோஷத்தில் அவர் கூறுகின்ற வார்த்தை தான் இது. என்னை நோக்கிக் கூப்பிடுவதினால் நான் பதிலளிக்கிறேன்; நீ வென்று விட்டாய் (உனக்கு பதில் அளித்து விட்டேன்) என்பதாக ஆண்டவர் கூறுகிற வார்த்தை (சங் 25 : 15, சங் 141 : 8) சொல்லப்பட்டிருக்கிறது. சபையாகிய கிறிஸ்தவர்கள் விசுவாசத்தோடு கேட்டு, அந்த விண்ணப்பத்திற்கு கர்த்தர் பதிலளிப்பதை தான் இந்தப் பகுதி வெளிப்படுத்துகிறது. வேதத்தில் இருந்து இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.
1) ஆதி 32 : 26-28 -ல் யாக்கோபு "என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” என்று தனது விண்ணப்பத்தில் விசுவாசமாகவும், உறுதியாகவும் இருந்ததைப் பார்க்கிறோம். 28-ஆம் வசனத்தில் யாக்கோபின் வேண்டுதலுக்கான வெற்றி கூறப்படுகிறது.
2) மத் 15 : 27,28 -ல் கானானிய ஸ்திரீ தன் மகளுக்காக வேண்டுதல் செய்கிறாள். அவளுடைய விசுவாசத்தினால் அவளுடைய விண்ணப்பத்திற்கு கிடைக்கிற வெற்றி 28-ஆம் வசனத்தில் கூறப்படுகிறது.
அதேபோல் இன்று சபையாகிய கிறிஸ்தவர்கள், விசுவாசத்தில் உறுதியாய் இருந்து, அவருடைய சித்தத்தின்படி ஜெபத்தில் கேட்டுக்கொள்வது எதுவோ, அது அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு பெறுகிற வெற்றியைப்பற்றி தான் இயேசு கிறிஸ்து கூறுகிறார். ஆனால் வேதத்தின் படி, எல்லாருக்கும் பதில் கொடுக்கப்படுவதில்லை, கனி கொடுக்கிறவர்களின் விண்ணப்பத்திற்கும் (யோவான் 15 : 16) மற்றும் அவருடைய வார்த்தையில் நிலைத்திருப்பவர்கள் (யோவான் 15 : 7) விண்ணப்பத்திற்கும் தான் இப்படிப்பட்ட வெற்றி கிடைக்கிறது.
"உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது” அளகபாரம் என்பது தலைமயிர். சபையின் தலைமயிரை வெள்ளாட்டு மந்தையோடு ஒப்பிடுகிறார். வேதத்திலே சபையினுடைய தலைமயிரை குறித்து அநேக இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. தலைமுடியின் சிறப்பம்சத்தை வேதத்தில் பார்க்கிறபொழுது,
(i) எண் 6 : 5,8-ல் நசரேய விரதம் இருக்கிறவர்கள் தலைமயிரை வளர விட வேண்டும்; இவர்கள் கர்த்தருக்கென்று பிரித்தெடுக்கப்பட்டு பரிசுத்தமாய் இருப்பார்கள் நசரேய விரதத்திற்கு தலைமயிர் அடையாளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதை பார்க்கிறோம்.
(ii) நியா. 13 : 5-ல் இந்த வசனத்தில் சிம்சோனின் தலைமயிரைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. சிம்சோனும் நசரேயனாயிருந்தான். அவனுடைய தலைமயிர் பெலத்தைக் குறிப்பிடுகிறது. இந்த வசனம் அர்ப்பணிப்பையும், ஆவிக்குரிய பெலத்தையும் குறிப்பிடுகிறது.
(iii) கூந்தல் என்பது சபையின் மகிமையைக் குறிக்கிறது (1கொரி 11 : 15). சபை எப்பொழுதும் கிறிஸ்துவின் மகிமையால் நிறைந்திருக்க வேண்டும்.
சபையாகிய ஸ்திரியின் கீழ்ப்படிதல், தெய்வ பக்தி, பரிசுத்தம் ஆகியவைகளே சபைக்கு மேன்மை. மணவாளனுக்காக பரிசுத்தமாக, அர்ப்பணிப்போடு, மேன்மை பொருந்தியவளாக இருப்பதால், கிறிஸ்து அதன் நிமித்தம் மகிழ்ச்சி அடைந்து, உன் கண்ணை என்னை விட்டு விலக்கு என்பதாக கூறுகிறார். இது ஒரு அன்பின் வார்த்தை ஆகும்.
நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்து வெற்றி பெறுகிறீர்களா?
குறிப்பு வசனம் : ஆதி 32: 26-28, யாத் 32: 10, உபா 3: 12, சங் 123: 2, மத் 15: 27,28