Sermons

உன்னதப்பாட்டு 6 : 4

இயேசு கிறிஸ்து பேசுவது

"என் பிரியமே! நீ திர்சாவைப்போல் சௌந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்.”

இயேசு கிறிஸ்து சபையை திர்சாவுக்கும், எருசலேம் நகரத்திற்கும், கொடிகள் பறக்கும் படைக்கும் ஒப்பிடுகிறார்.

 திர்சா என்பது ஒரு நகரம் (யோசுவா 12 : 8,24, 1இராஜா 16:23) திர்சா தேசத்தில் இராஜாக்கள் அரசாண்டு இருக்கிறார்கள். இது ஒரு செழிப்பான, அழகான தேசமாக இருந்திருக்கிறது எனவேதான் வேதம் இதை சௌந்தரியத்துக்கு ஒப்பிடுகிறது. கிறிஸ்துவின் பார்வையில் சபை அழகானவர்களாக இருக்கிறார்கள். எப்படிப்பட்ட அழகு? 1  பேதுரு 3:4 இல் சொல்லப்பட்டிருக்கிற  அலங்காரமுள்ள அழகு.

அதேபோல் எருசலேமினுடைய அழகும் சபைக்கு ஒப்பிடப்படுகிறது. சங்கீதம் 122: 3-7 இல்  எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய ஜனங்கள் அவருடைய நாமத்தை  ஸ்தோத்திரிப்பதற்குப் போவார்கள் என்றும், நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது என்றும், சமாதானமும்,  சுகமும் இருக்கிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் பார்வையில் சபை ப்படிப்பட்ட எருசலேமின் ஆசீர்வாதத்தை பெற்றிருக்கிறதை இங்கே பார்க்கிறோம்.

 "கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள்”  இயேசு கிறிஸ்து சபையைப் போர்களில் வெற்றி பெற்று கெம்பீரமாக கொடியை ஏந்திக்கொண்டு வரும் படைக்கு ஒப்பிடுகிறார். போர்களில் வெற்றி பெற்றவர்கள், தங்கள் கொடியை மேல் நோக்கி பறக்க விடுவார்கள்;. இது வெற்றியின் அடையாளத்தை எடுத்துக் கூறுவதாக அமையும். கெடியுமானவள் என்பது கெம்பீரத்தை குறிக்கும். இன்று சபை யாரோடு போர் செய்கிறார்கள்? வேதம் கூறுவது போல் நமது எதிராளியாகிய சாத்தானோடு போர் செய்கிறார்கள். எபே 6 : 11-18 ல் சொல்லப்பட்டிருப்பது போல, நாம் கர்த்தரின் சத்துவத்தின் வல்லமையில் பலப்பட்டு, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தை தரித்துக்கொண்டு, பிசாசின் கிரியைகளோடு எதிர்த்து ஜெயம் பெற வேண்டும். சபையை ஆவிக்குரிய யுத்தத்திற்கு பழக்குவிக்கிறவரும் அவரே (சங் 144 : 1). எனவே யோசுவா 1 : 9 -ல் சொல்லப்பட்டிருப்பது போல, பலங்கொண்டு திடமனதாயிருக்க வேண்டும். ஏசாயா 59: 19 ல் "வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சபை எல்லாவிதத்திலும் கிறிஸ்துவின் துணையோடு வெற்றி பெற்று, கொடிகள் பறக்கும் படையை போல் இருக்கிறார்கள் என்று மனவளனாகிய கிறிஸ்து கூறுகிறார். 

இப்படி ஆவிக்குரிய யுத்தத்தில் ஜெயம் பெறுகிற சபையாரைப் பார்த்து இயேசு கிறிஸ்து கூறுகிறதாவது, ஒரு போர் சேனை யுத்தம் செய்து, வெற்றிப் பெற்று, எவ்வளவு வீரமாய் கெம்பீரத்தோடு வருகிறதோ! அதேபோல் என்னுடைய சபையாகிய நீங்கள் சாத்தானை எதிர்த்து ஜெயம் பெற்றவர்களாக இருக்கிறீர்கள் என்று கூறுகிறார். எனவே நீங்கள் என் பார்வைக்கு அழகானவர்கள், செம்மையானவர்கள், பலமுள்ளவர்கள், உறுதியானவர்கள், சமாதானமும் சுகமும் பெற்றவர்கள் என்று இந்த வசனத்தின் மூலம் கிறிஸ்து பேசுகிறார்.

நீங்கள் ஜெயம் பெறுகிற கிறிஸ்துவின் சேனையாக இருக்கிறீர்களா?

குறிப்பு வசனம்:  யோசுவா 12: 8,24, சங் 18: 39,   2தீமோ 2: 3, எபே 6: 11-18, சங் 144: 1,  யோசுவா 1 : 9


Loading...