"என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.”
முந்தைய வசனத்தில் கேட்ட கேள்விக்கு சபை, இயேசு கிறிஸ்துவின் அழகைக் குறித்து விவரித்து கூறும் வசனங்கள் இவை. எங்களுடைய நேசர் வெண்மையும், சிவப்புமானவர்; பொதுவாக வெள்ளை மற்றும் சிவப்பு இரண்டும் கலந்து இருக்கிற முகம் மிகவும் அழகாக இருக்கும். இதை ஆவிக்குரிய விதத்தில் பார்க்கும் பொழுது; வெண்மை, பரிசுத்தத்தை குறிக்கிறது. இயேசு கிறிஸ்து பரிசுத்தம் என்பதை அறிவோம். சிவப்பு, பலியைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்து நமக்காக பலியானார் என்பதையும் அறிவோம். மேலும் இயேசு கிறிஸ்து வெண்மையாகவும், சிவப்பாகவும் எப்படியெல்லாம் இருக்கிறார் என்பதை வேதம் நமக்குச் சொல்லுகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
(1) தானி 7 : 9 -ல் தானியேல் தன்னுடைய தரிசனத்தில், இயேசு கிறிஸ்துவை பார்த்ததை இந்த வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் அவருடைய சிரசின்மயிர் வெண்மையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
(2) லூக் 9 : 29 -ல் இயேசு கிறிஸ்துவின் வஸ்திரத்தை வெண்மையோடு வேதம் ஒப்பிடுகிறது.
(3) மேலும் வெளி 1:14-ல் அவருடைய சிரசும், மயிரும் வெண்மையாக இருந்தது என்றும், அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தது என்றும் தீர்க்கதரிசி குறிப்பிடுகிறார்.
(4) வெளி 19: 13-ல் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; என்று வேதம் குறிப்பிடுகிறது.
பதினாயிரம்பேர்களில் சிறந்தவர். இயேசு பதினாயிரம் பேர்களில் (இது ஒரு முழு சேனையைக் குறிக்கும்) மிக அழகானவர். இயேசுவுக்கு இணையாய் இந்த பூமியில் அழகில் சிறந்தவர் ஒருவருமில்லை. இந்த பூமியில் எவ்வளவு அழகாக ஒருவர் இருந்தாலும், அவர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களில் பல குறைகளைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், நான் இங்கு சொல்லும் என் ஆத்ம நேசர் இயேசுவோ, முற்றிலும் அழகானவர், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா மனிதர்களையும், இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளை விடவும் அவர் சிறந்தவர். இவரில் பழுதொன்றும் கண்டுபிடிக்க முடியாத பூரண அழகுள்ளவர்.
அன்பானவர்களே! இப்படிப்பட்ட அழகான நேசரைப் பெற்றிருக்கிற நாம் எவ்வளவு பாக்கியமுள்ளவர்கள், இப்பாக்கியத்தை இழந்துவிடாமல் கிட்டி சேருங்கள்.
நீங்கள் கிறிஸ்துவின் பரிசுத்தத்தையும், பலியையும் உங்கள் வாழ்வில் அனுபவிக்கிறீர்களா?
குறிப்பு வசனம்: எபி 7: 26, புலம் 4: 7, வெளி 1: 14