Sermons

உன்னதப்பாட்டு 5 : 4

"என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.”

நேசர் வருந்தி அழைக்கும் அழைப்பை இந்த வசனம் குறிப்பிடுகிறது. கிறிஸ்தவர்களாக இருக்கிறவர்களில் ஒரு சிலர் அவரை விட்டுப் பின்வாங்கிப் போய் இருதயத்தின் கதவை அடைத்தாலும், அவர் கிருபையின் கரம் இன்னும் நம்மை நோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறது. அவர் தான் உருவாக்கிய மனுக்குலத்தின் மேல் கண் நோக்கமாய் இருக்கிறார். சிறு துவாரத்தின் வழியாக கையை நீட்டுகிறார் என்பது நம் இருதயத்தில் ஒரு சிறு இடம் வேண்டி அவர் ஏங்குவதை காட்டுகிறது. 

எரே 4 : 14-22 ,ல் தேவனுடைய வேதனையை அனுபவித்து உணர்ந்த எரேமியா, வரப்போகும் அழிவைக் குறித்தும், தேவனின் வேதனையும், துக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எரே 4 : 19 -ல் "என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக் கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே.” இருதயம் என்னில் கதறுகிறது என்று ஆண்டவர் வேதனைப்படுகிறார். அதேவேளையில் பேசாமல் அமர்ந்திருக்க கூடாது என்று ஜனங்களுக்காக பரிதவிக்கிறார. ஒரு சிறு வாய்ப்புக்காக இன்று ஒவ்வொருடைய இதயக் கதவைத் தட்டிக் கொணடு தனது கையை நீட்டிஅழைத்துக் கொண்டிருக்கிறார்.

"அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது”  இயேசு கிறிஸ்து அழைப்பதை சிலர் உணருகின்றார்கள்;. அவரிடம் போக உள்ளம் பொங்குகிறது; ஆனாலும் இன்னும் சிலர் இருதயக் கதவை முழுமையாக திறக்க முடியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு குழப்பமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் (சங் 38 : 10). இதைதான் பவுல் ரோமர் 7: 15,19,21-23 வசனங்களில் கூறுகிறார். உலகத்தின் மயக்கம் அவருக்கு கதவைத் திறக்க முடியாமல் பண்ணி கொண்டிருக்கிறது. கிருபையின் காலத்தில் வாழ்கின்ற நாம், அவருடைய கிருபையால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை முதலாவது உணர வேண்டும். அநேகர், என் வாழ்க்கை நன்றாகத் தானே இருக்கிறது என்று கர்த்தரை விட்டு பின் வாங்கி போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர் நமக்காக பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்து பரிந்து பேசிக் கொண்டிருப்பதால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அன்பானவர்களே! ஒருவேளை இன்று நீங்கள் ஆண்டவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருந்தால், இதைப்புரிந்து அவருடைய கிருபையின் கரம் உங்கள் ருதயக் கதவைத் தட்டுகிறது என்பதை உணர்ந்து, இப்பொழுதே இயேசு கிறிஸ்துவுக்கு உங்கள் இருதயக் கதவை திறந்து கொடுங்கள்.

உங்கள் ஆத்துமா கிறிஸ்துவில் எவ்வாறு உள்ளது?

குறிப்பு வசனம் : சங்கீதம் 38: 2, அப் 16: 14, எரேமியா 4: 14-22


Loading...