Sermons

உன்னதப்பாட்டு 5 : 2

உன்னதப்பாட்டு 5 : 2-4  (வசனங்கள் இயேசுவின் மனக்கவலையை குறிக்கிறது.)

"நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற ; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.”

மணவாட்டி சொல்லுகிறதாவது, "நான் நித்திரை பண்ணினேன்” -  இது எதைக் குறிக்கிறது என்றால், சபையில் கிறிஸ்தவர்களாக இருந்தும், ஆவிக்குரிய நிலையில் தூங்குகிறவர்களைக் கூறுகிறது. இன்று எழுப்புதல் வேண்டுமென்று எல்லா இடங்களிலும் கிறிஸ்தவ கூட்டங்களிலே சபைகளிலே பேசப்படுவதை நாம் பார்க்கிறோம். அதாவது அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்ப வேண்டுமென்பதுதான் இதன்அர்த்தம்.  அதைத் தான் இங்கே நித்திரை பண்ணுகிறேனென்று சபை சொல்லுகிறது. நித்திரை என்று சொல்லுகிற பொழுது விசுவாசிகள் செயல்படாமல் எதுவுமே செய்யாமல் கடமைக்காக கிறிஸ்தவர்களாக இருப்பதை குறிப்பிடுகிறது.

இயேசு கிறிஸ்து உலகம் முழுவதும் தன்னுடைய சுவிசேஷத்தை அறிவிக்கச் சொன்னார். இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று சொன்னார் (சங் 1 : 2). இடைவிடாமல் ஜெபிக்க வேண்டுமென்று வேதம் நமக்குச் சொல்லுகிறது. இவற்றையெல்லாம் செய்யாமல் இருக்கிறவர்களைத் தான் நித்திரை பண்ணிக்கொண்டிருக்கிற கிறிஸ்தவர்கள் என்று வேதம் குறிப்பிடுகிறது. கர்த்தருடைய வார்த்தையில் நாம் எப்பொழுதும் விழிப்போடு இருக்க வேண்டும் இல்லையென்றால் கள்ள உபதேசங்கள் நம் வாழ்க்கையில் வந்துவிடும். இயேசுகிறிஸ்து விழித்திருங்கள் என்று சபையைப் பார்த்து சொல்லுகிறார், ஆனால் சபை இன்று நான் நித்திரை பண்ணுகிறேன் என்று சொல்லுகிறது.

"என் இதயமோ விழித்திருந்தது”  இது தான் இன்றைய கிறிஸ்தவர்களின் உண்மையான நிலைமை. கிறிஸ்தவர்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது; ஆனால் ஜெபிக்க முடிவதில்லை. வேதம் படிக்க வேண்டும் என்று சிலருக்கு ஆசை இருக்கிறது; ஆனால் படிக்க முடியவதில்லை. அதைத்தான் சபை சொல்லுகிறது இருதயம் விழித்திருக்கிறது; ஆனால் நான் நித்திரை செய்து கொண்டிருக்கிறேன் என்பதாக மத் 26 : 41-வது வசனம் சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். நான் வேதம் வாசிக்கவும், ஜெபிக்கவும் ஆசைப்படுகிறேன்; ஆனால் அதை நான் செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதாக சபை தன்னுடைய நிலைமையை ஒத்துக்கொள்ளுகிறதை நாம் பார்க்கிறோம். நம் அனுதின வாழ்க்கையில், நாம் தினமும் உலகப்பிரகாரமான காரியங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதுதான் இதற்குக் காரணம். அநேக கிறிஸ்தவர்கள் இயேசுவை புறக்கணிப்பது இல்லை, ஆனால் அவர்கள் நித்திரையினால் அவரை புறக்கணிக்கிறோம் என்பதை அறியாமலேயே இருக்கிறார்கள்.

"கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்”  சபையாகிய சில கிறிஸ்தவர்களால் புறக்கணிக்கப்பட்ட இயேசு கிறிஸ்து, இன்று கதவுக்கு வெளியே நின்றுத் தட்டிக் கொண்டிருக்கிறார். "இதோ,வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.” (வெளி 3 : 20)-ல் பார்க்கிறோம். அனேகம் பேருக்குத் தெரிகிறது, கிறிஸ்து என் வாழ்வில் இல்லை: அவர் வெளியில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறாரென்று, ஆனாலும் அவர்களுக்குக் கதவைத் திறக்க மனமில்லை, ஏனென்றால் உலக இச்சைகள் அவர்களுக்கு முன்பாக இருந்துகொண்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவை நான் வெளியே அனுப்பிவிட்டேன். ஆனாலும் அவர் என் இருதயக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார் என்று அறிந்தும் சிலர் அதை உணராமலும் , திறக்காமலும்; இருக்கிறார்கள். இதைப் படிக்கிற நீங்கள் யாராவது உணர்வில்லாத கிறிஸ்தவர்களாக இருந்தால், இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் வெளியே நின்று கதவைத் தட்டிக்கொண்டிருப்பவராக இருப்பாரானால், தயவு செய்து இன்று மனந்திரும்பி உங்கள் வாழ்க்கையில் அவருக்கு முதலிடம் கொடுங்கள். காலம் செல்லாது. நாம் கடைசி மணிப்பொழுதில், ஆபத்தான பயங்கரமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், மத் 2: 3-ல் "மனந்திரும்புங்கள் பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று கூறுகிறதை நினைவில் கொள்வோம்.  

"என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற” என்னால் மீட்கப்பட்டு, என் தோட்டத்திற்குள் இருக்கிற என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என்னால் நீதிமானாக்கப்பட்ட என் உத்தமியே! எனக்கு கதவைத் திறப்பாயாக என்று இயேசு கிறிஸ்து வெளியிலிருந்து சொல்லுகிற சத்தம் தான் இது. சபையாகிய சில கிறிஸ்தவர்களால் புறக்கணிக்கப்பட்டப் பிறகும், இன்னும் அன்பான வார்த்தைகளைச் சொல்லி, நான் உன்னை இந்த சூழ்நிலையிலும் நேசிக்கிறேன் என்று கரம் விரித்து அன்போடு இயேசு கிறிஸ்து அழைக்கிறார். 

"என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்”  இங்கே கிறிஸ்து புறக்கணிக்க படுவதை கூருகிறார் (ஏசாயா 53 : 3).  இயேசு சொல்லுகிறார், உன் இருதயத்தில் வாசம் செய்ய வேண்டிய நான், உன்னால் புறந்தள்ளப்பட்டுப் பனியிலும், தூறலிலும் நின்று நனைகிறேன்; அதாவது நான் உன்னை மீட்க வாஞ்சித்து கஷ்டப்படுகிறேன் என்று சபையைப் பார்த்துக் கூறுகிறார்.

இதைப் படிக்கிற யாராவது, கடமைக் கிறிஸ்தவர்களாக, கடமைக்காக ஆலயத்திற்கு போகிறவர்களாக இருந்தால் தயவு செய்து இன்று மனம் மாறுங்கள். இந்த வசனத்தில் அவருடைய கூக்குரலைக் கேட்டீர்களே! நமக்காக இரத்தம் சிந்தின தேவகுமாரனுக்கு இன்று  தயக்கதவை பூட்டுகிறவர்களுக்கு, ஒரு நாள் அவருடைய பரலோகக்கதவு பூட்டப்படட்டிருக்கும். சபை எடுத்துக் கொள்ளப்படும்போது கைவிடப்பட்டுப் போவார்கள் என்று  வேதத்தில் நமக்கு எச்சரிக்கையாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் ஆலயமாகிய நம்மில் இயேசு கிறிஸ்து வாசம் செய்ய கதவை திறந்திடுங்கள்.

நீங்கள் விழித்திருக்கிற கிறிஸ்தவரா? உங்கள் இதய கதவு கிறிஸ்துவுக்கு திறந்து இருக்கிறதா?

குறிப்பு வசனம் :  மத்தேயு 25: 4,5, மத்தேயு 26: 40-41 , லூக்கா 9: 32, ரோமர் 13: 11, எபேசியர் 5: 14,   1தெச 5: 6, லூக் 11: 7


Loading...