சபையைக் குறித்து இயேசு கிறிஸ்து பேசுவது
"என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.”
"என் சகோதரியே! என் மணவாளியே!” என்று இயேசு கிறிஸ்து சபையாகிய கிறிஸ்தவர்களை அழைக்கிறார். இதை நாம் முந்தைய அதிகாரத்தில் பார்த்திருக்கிறோம்.
"நான் என் தோட்டத்தில் வந்தேன்” இங்கே தோட்டம் என்பது ஆத்துமாவை குறிக்கும் சபை ஐக்கியத்தையும் குறிக்கும்; இரண்டுமே கிறிஸ்துவுக்கே சொந்தம். இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து சொல்லுகிறதாவது, "நான்” என் சபைக்கு வந்தேன்; அதாவது கிறிஸ்து சபையோடு உறவாடுதலையும், சபை கர்த்தரை ஆராதிக்கிற பகுதியைக் குறிப்பிடுகிறது (மத்தேயு 18:20). இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், சபை இயேசு கிறிஸ்துவினுடையது; எந்த ஊழியக்காரருக்கோ அல்லது மேய்ப்பருக்கோ உரியது அல்ல. இன்று அநேகர் இந்தசபை எனக்குரியது என்று கூறுகின்றார்கள்; ஆனால் இயேசு என் சபையாகிய என் தோட்டத்திற்கு வந்தேன் என்று சொல்லுகிறார். கிறிஸ்து என்னுடையது என்று கூறும்போது சபை மனிதர்களுக்குச் சொந்தம் கிடையாது என்று அர்த்தம்.
"என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்;” வெள்ளைப்போளமும், கந்தவர்க்கமும் பரிசுத்தத்தைக் குறிக்கிறது. யாத். 30 : 34 - 37 - இல் கர்த்தர் மோசேக்கு கட்டளைக் கொடுத்து; வெள்ளைப்போளமும், அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களை பொடியாக்கி, அதை கர்த்தர் சந்திக்கும் ஆசரிப்பு கூடாரத்தில் சாட்சி சந்நிதியில் வைக்கவும், அது மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது மற்றும் பரிசுத்த தூபவர்க்கமாய் இருப்பதற்கு கட்டளைக் கொடுத்தார். இதன் அடிப்படையில் நாம் பார்க்கும்போது வெள்ளைப்போளமும், கந்தவர்க்கமும், ஜெபத்தையும், பரிசுத்த அலங்காரத்தோடு தொழுது கொள்வதையும் (சங் 29 : 2) குறிக்கிறது. இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், சபையாகிய என் தோட்டத்தில் செய்யப்படுகிற ஜெபத்தையும், ஆராதனையையும் நான் அங்கீகரித்திருக்கிறேன்; இவை எல்லாம் என் கணக்கில் இருக்கிறது; அதை நான் என்னிடத்தில் சேர்த்துக் கொண்டேன் என்கிறார்.
"என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்;” என்பதை அறிவதற்கு , வேதத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து இதை தியானிக்கலாம். இயேசு கிறிஸ்து மரித்து உயித்தெழுந்தப்பிறகு தனது சீஷர்களிடத்தில் புசிப்பதற்கு ஏதாவது உண்டா என்று லூக் 24 : 42 -ல் கேட்கிறார். அவருடைய சீஷர்கள் அவருக்கு பொரித்த மீன்கண்டத்தையும், தேன் கூட்டுத் துணிக்கையையும் அவருக்கு கொடுத்தார்கள். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலிருந்தப் பொழுது தனது பசிக்கு தேன் கூட்டு துணிக்கையைப் புசித்தார் என்று பார்க்கிறோம்.
ஆவிக்குரிய அர்த்தத்தில் தேன் மற்றும் தேன் கூடு கர்த்தருடைய வார்த்தையைக் குறிப்பிடுகிறது. (நீதி 16 : 24, சங் 19 : 7-10) -ல் சபையாகிய ஆத்தும தோட்டத்தில் கர்த்தருடைய வார்த்தை தேனைப் போல போஷிப்பாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய வார்த்தை நம்மோடு இடைப்படுவதின் மூலம் நாம் ஆவிக்குரிய மன்னாவை புசிக்கிறோம். பின்பு சபையாக கிறிஸ்தவர்கள் வாயிலிருந்து கர்த்தருடைய வார்த்தை வெளிப்படுவதை தான் இயேசு கிறிஸ்து இந்த வார்த்தையின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
"என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன்.”
இங்கே இயேசு கிறிஸ்து என் திராட்சை ரசத்தை என்று அவர் கொடுக்கிற அறுவடையும், அவர் நமக்கு கொடுத்திருக்கிற கிருபையின் காலத்தையும், இந்த காலத்தில் அவர் செய்கிற அற்புதத்தையும், இலவசமாய் பெற்ற ஆவிக்குரிய நன்மையையும் குறிப்பிடுகிறார்.
ஆமோஸ் 9: 13 இல் "பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள்வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்." இந்த வசனம் மணவாளன் சபைக்கு கொடுக்கிற அறுவடையை குறிப்பிடுகிறது. மேலும் யோவான் 2: 10 இல் இயேசு கிறிஸ்து செய்த முதல் அற்புதம் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது. அந்த கல்யாண வீட்டில் ஜனங்கள் கூறுகிறார்கள் "எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்." தன் ஆவிக்குரிய அர்த்தம் நியாயப்பிரமாணத்து காலத்தை விட, புதிய ஏற்பாட்டு கிருபையின் காலம் மிக அருமையானது. கிறிஸ்துவை கண்டடைத்தக்க நல்ல காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் இந்த வசனம் கூறுகிறது போல அநேக அற்புதங்களையும் அவர் செய்து கொண்டிருக்கிறார்.
மேலும் என் பாலோடும் குடித்தேன் என்கிறார். பால் என்பது கர்த்தருடைய வசனத்தை குறிக்கும் 1 பேதுரு 2:3. இந்த கிருபையின் காலத்தில் கர்த்தருடைய வார்த்தை உலகம் முழுவதும் சொல்வதை குறிப்பிடுகிறார்.
இந்த தீர்க்கதரிசன வார்த்தை ஏசா 55 : 1 -ல் சொல்லப்பட்டிருக்கிற கர்த்தருடைய வார்த்தையோடு ஒப்பிடலாம். கர்த்தர் கூறுகிறதாவது "நீங்கள் வந்து பணமுமின்றி விலையுமின்றி திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்”என்று தனது ஜனங்களுக்கு அழைப்பு விடுகிறார். இங்கே திராட்சரசமும், பாலும் இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். இன்று சபையில் இது எதைக் குறிக்கிறது? இயேசு கிறிஸ்து எதை இலவசமாக கொடுக்கிறாரோ அதைக் குறிக்கிறது.
1.இரட்சிப்பு, கிருபை (ரோமர் 3 : 24)
2.வரங்கள், கனிகள் (மத்தேயு 10 : 8)
3.ஜீவத்தண்ணீர் (வெளி 22 : 17)
கிறிஸ்துவிடமிருந்து சபை இலவசமாய் பெற்ற இந்த ஆவிக்குரிய நன்மைகளினால் ஊழியம் செய்வதையும், அதினால் அவர் திருப்தியடைவதையும் இந்தப் பகுதியில் வெளிப்படுத்துகிறார்.
"சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.” இந்த வசனத்தில் முந்தின பகுதி கிறிஸ்துவில் பலப்பட்டு அவருடைய சித்தத்தை செய்து முடிக்கிற மணவாட்டியும், அதனால் மணவாளன் திருப்தி அடைவதையும் கூறுகிறார். தோட்டத்தில் வந்து ருசித்தேன், குடித்தேன் என்று கூறுகிறார். அவருடைய போஜனம் என்பது பிதாவின் சித்தத்தை செய்து முடிப்பது என்று யோவான் 4:34 இல் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த வசனத்தின் பின்பகுதியில் சிநேகிதரே! பிரியமானவர்களே! என்று மனவாட்டி ஆயத்தம் இல்லாதவர்களை பார்த்து கூறுகிறார். (மத் 22 : 12) -ல் கல்யாண வஸ்திரம் இல்லாதவனை சிநேகிதன் என்று அழைக்கிறார்; அதாவது மணவாட்டி ஆயத்தம் இல்லாதவர்கள் அவர்கள் என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், என் சபையிலே என்னை பிரியப்படுத்துகிற ஆராதனை, ஜெபம், வசனத்தைத் தியானித்தல் ஆகியவை இருக்கிறது. இதனால் அநேகர் கனியுள்ள வாழ்க்கையோடு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். ஆனாலும் சிலர் சபைகளில் நான் கொடுக்கிற இந்த ஆசீர்வாதத்தையும், பெற்றுக்கொள்ள முடியாமல் கடமைக்காக கிறிஸ்துவ வாழ்க்கை வாழ்கிறார்கள். அனலும், குளிரும், உணர்வும், கர்த்தருக்கு பயப்படுகிற பயமும் இல்லாத கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் கிறிஸ்தவர்கள் என்கிறார்கள்; அப்படிப்பட்ட கிறிஸ்தவர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து அழைக்கிறார். என் சிநேகிதரே! பிரியமானவர்களே! நான் கொடுக்கும் இந்த மன்னாவை வந்து புசியுங்கள் (யோவான் 6 : 51), நான் கொடுக்கும் ஜீவ தண்ணீரை குடியுங்கள் (யோவான் 4 : 14) என்கிறார்.
அன்பானவர்களே! இயேசு கிறிஸ்து இன்றும் எல்லோரையும் அன்பாக அழைக்கிறார். பேதுரு இயேசுவை விட்டுச் சென்ற போதும் அவனைத் தேடி சென்று "என்னில் அன்பாய் இருக்கிறாயா?” என்றார் (யோவான் 21 : 15). அதேபோல் இன்றும் சபையிலுள்ள எல்லோரையும் அன்போடு அழைக்கிறார். அவர் கொடுக்கிற தண்ணீரையும், அப்பத்தையும் புசிக்க அழைக்கிறார். ஒருவேளை இயேசுவை விட்டுப் பின்வாங்கிப்போனவர்கள் யாராவது இதை படிப்பீர்களானால், அல்லது இயேசுவை அறியாதவர்கள் இதை படிப்பீர்களானால் இன்று அவருடைய சத்தத்திற்கு செவி கொடுப்பீர்களா? அருமையான காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அவரைக் கண்டடையத்தக்க நல்ல சமயத்தில் உள்ளோம் (ஏசா 55 : 6) காலத்தைப் பிரயோஜனப்படுத்துங்கள்.
நீங்கள் அவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கிறீர்களா?
குறிப்பு வசனம் : ஏசாயா 5: 1-7,ஏசாயா 51: 3, ஏசாயா 58: 11,லூக்கா 24: 42, சங் 19: 10, நீதி 16: 24, 1சாமு14: 25,27