Sermons

உன்னதப்பாட்டு 4 : 11

"என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.”

"என் மணவாளியே!” என்று சபையைப் பார்த்து இயேசு கிறிஸ்து அழைக்கிறார். 

"உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது” நாம் இயேசு கிறிஸ்துவை, நமது உதடுகளின் வழியாகத் துதிப்பதையும்,அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவதையும், சுவிசேஷத்தை உலகமுழுவதும் அறிவிப்பதையும் இந்த பகுதி குறிப்பிடுகிறது. மேலும் தேன் என்பது கர்த்தருடைய வார்த்தை, ஆசீர்வாதம், காணிக்கை மற்றும் உணவுக்கு என்று வேதம் குறிப்பிடுகிறது. இந்த வசனத்தில் தேனைக் கர்த்தருடைய வார்த்தைக்கு ஒப்பிடுகிறோம். எசேக் 3 : 1-4 -ல் கர்த்தருடைய வார்த்தையாகிய சுருளைத் தேனோடு ஒப்பிட்டு சொல்லப்பட்டிருக்கிறதை காணலாம். அதேபோல் எசேக் 3 : 1,4 -ல் கர்த்தர் ஜனங்களோடு பேச சொல்கிறார். இப்படியாக கர்த்தருடைய வார்த்தையை நமது உதடுகளின் வழியாக அறிவிப்பதைக் கவிதை நடையில் உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது என்று இந்த வசனம் குறிப்பிடுகிறது. 

மேலும் ஏசாயா 6 : 6,7 -ல், ஏசாயாவின் உதடுகள் சேராபீன்களில் ஒருவன் குறட்டால் தொட்டதால், அவன் அக்கிரமம் நீங்கி பாவம் நிவர்த்தியானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் கிறிஸ்து இன்று சபையில் அநேகருடைய அசுத்த உதடுகளைத் தொட்டு நம்மை பாவத்திற்கு நீக்கி பாதுகாத்துக் கொண்டதால், நாம் அவரைத் துதிக்கிறோம். இது மணவாளனாகிய கிறிஸ்துவுக்கு தேன் ஒழுகுகிறது போல் இனிமையாக இருக்கிறது. 

"உன் நாவின் கீழ் தேனும், பாலும் இருக்கிறது”  வேதத்தில் தேனும், பாலும் கர்த்தருடைய வார்த்தைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. (சங் 119 : 103, 1பேதுரு 2 : 3). சபையே உன்னுடைய நாவின் கீழ் என்னுடைய வார்த்தை இருக்கிறது. தேனும், பாலுமாகிய கர்த்தருடைய வார்த்தை நமக்குள் இருக்கும் பொழுது தான் நாம் ஏற்றவேளையில் நமது உதடுகளின் வழியாக அறிவிக்க முடியும். அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் நமது நாவின் கீழ் பத்திரப்படுத்தி ஏற்ற சமயத்தில் சொல்ல வேண்டும்.      (நீதி 25 : 11).

"வஸ்திரங்களின் வாசனை”  நீதியின் வஸ்திரம் (ஏசாயா 61 : 10), இரட்சிப்பின் வஸ்திரம் (ஏசாயா 61 : 10), துதியின் வஸ்திரம் (ஏசாயா 61 : 3) இவைகள் இயேசு கிறிஸ்துவுக்கு வாசனையாக இருக்கிறதாம். வஸ்திரத்தின் வாசனை லீபனோனின் வாசனையோடு ஒப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு ஆசீர்வாதத்தையும், செழிப்பையும் குறிப்பிடுகிறது (ஓசியா 14 : 7).

அன்பானவர்களே! கர்த்தருடைய வார்த்தையைப் பெற்று அதை நாம் அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் கர்த்தருடைய வார்த்தையால் நிரப்பப்படும் பொழுது ஆவிக்குரிய வஸ்திரம் கொடுக்கப்படுகிறது. அது நமது வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது என்பதை இந்த வசனம் கூறுகிறது.

கர்த்தருடைய வார்த்தை உங்களுக்குள் இருக்கிறதா?

குறிப்பு வசனம் : நீதி 16: 24, சங் 51: 15,சங் 63: 3, நீதி 16: 13,ஓசியா 14: 7

Loading...