Sermons

உன்னதப்பாட்டு 4 : 9

"என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.”

"என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே!”  என்று இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து சொல்கிறார். அதாவது சபையினுடைய நல்ல நடக்கையினால் கர்த்தருடைய மனம் மகிழ்ச்சியடையும்படி சபை நடந்திருக்கிறதை இயேசு கிறிஸ்து இங்கே குறிப்பிடுகின்றார். கவர்ந்து கொண்டாய் என்பது தேவனுக்கு பிரியமாய் வாழ்வது; அப்படியானால் அவருக்கு பிரியமுன்டாக  தக்க மாற்றப்படுதல். மேலும் அவருக்கு பிரியமுள்ளவர்களாக இருந்து அவருடைய சித்தத்தை நிறைவேற்றுதல், இதுதான் என் இருதயத்தை கவர்ந்து கொண்டாய் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை சபைக்கு ஒரு மூத்த சகோதரராக காட்டப்பட்டிருக்கிறது. அதனால் சபையை இந்த இடத்தில் சகோதரி என்று சொல்லியிருக்கிறதைப் பார்க்கலாம். இயேசு கிறிஸ்துவுக்கு சபை சகோதரியாகவும், மணவாளியாகவும் இருக்கிறதை வேதம் சொல்லுகிறது. நாம் எப்படி இயேசுவுக்கு சகோதர, சகோதரிகளாக இருக்கிறோம் என்று பார்க்கும்போது யோவான் 3 : 16-ல் தேவன், தம்முடைய  ஒரேபேறான குமாரன் என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து சொல்லியிருக்கிறார். யோவான் 1 : 12-ல் நாமும் பிள்ளைகளாகும்படி அங்கீகாரம் கொடுத்துள்ளார். இந்த இரண்டு வசனங்களையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது, இயேசு கிறிஸ்துவை அவருடைய ஒரேபேறான குமாரன் என்றும், அதேபோல் நம்மை அவருடைய பிள்ளைகள் என்றும் சொல்வதின் மூலமாக இயேசு கிறிஸ்துவை சபைக்கு மூத்த சகோதரராக ஒப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இந்த உறவின் அடிப்படையில் சபையை சகோதரியாகவும், இயேசு கிறிஸ்து மணவாளன் என்ற கோணத்தில் மணவாட்டியாகவுகம் ஒப்பிடுகிறார். 

"உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.”  என்று இயேசு கிறிஸ்து இங்கே சொல்கிறதை நாம் பார்க்கிறோம். பொதுவாக மனிதனுக்கு இரண்டு கண்கள் இருப்பதை அறிவோம், இங்கே உன் கண்களிலொன்றினாலும் என்று சொல்லியிருப்பது ஆத்துமக் கண்ணாகிய மனக்கண்ணை அவர் இங்கு குறிப்பிடுகிறார். எபே 1 : 19-ல் பவுல் குறிப்பிடும் பொழுது பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்கிறார். நாம் நமது ஆத்தும கண்கள் மூலம் அவரோடு இடைப்படுவதும், பேசுவதும் அவருடைய இருதயத்திற்கு ஏற்றதாய் இருக்கிறது என்று சொல்கிறார். மேலும் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தை கர்த்தருடைய தீர்க்கதரிசன வார்த்தை, மேலும் எசேக் 16 : 11,12 -ல் சொல்லப்பட்டிருக்கிற "கர்த்தருடைய வார்த்தையின் வெளிப்பாடு."  அதாவது சபையே நீ என்னுடையவள் என்றும் என்னால் நீ ஆவிக்குரிய அலங்காரத்தைப் பெற்று என்னால் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் என்பதையும் கிறிஸ்து இந்த வார்த்தையின் மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார். இதற்கு திருஷ்டாந்தமாக  ஆதி 41 : 42 -ல் பார்வோன் யோசேப்புக்கு  பொன் சரப்பணியை அணிவித்து அதிகாரியாக உயர்த்துகிறான். அதேபோல் இராஜாவும், மணவாளனுமாகிய இயேசு கிறிஸ்து சபையாகிய நமக்கு சரப்பணியை அணிவித்து நம்மை உயர்த்துகிறார். 

இன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்திருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் சரப்பணி போல நமது கழுத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. அது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக கிறிஸ்து நம்மை பார்த்துக் கூறுகிறார். ஆவிக்குரிய கண்ணோட்டத்தில் இந்த வசனத்தை நாம் பார்க்கிறப்பொழுது சரப்பணி என்பது கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதை தெளிவுபடுத்துகிறது. எப்படியெனில், நீதி 1 : 8,9 -ம் வசனத்தை நாம் பார்க்கும்பொழுது அதில் பெற்றோருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிற காரியம் நம் கழுத்துக்கு சரப்பணியாக ,இருக்கும் என்று சாலொமோன் குறிப்பிடுகிறார். இங்கே நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதை உன்னதப்பாட்டில் சரப்பணிக்கு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது. கண்களில் ஒன்றாகிலும் என்கிற வார்த்தை ஆத்துமாவோடும் தொடர்புடையது. இது எதைக் குறிக்கிறது என்றால்? உபா 11 : 13 -ல் சொல்லப்பட்டிருப்பது போல நாம்  "நம் முழு ஆத்துமாவோடும் அவரில் அன்பு கூர்ந்து (உன் கண்களிலொன்றினாலும்), அவருடைய கற்பனைக்கு கீழ்ப்படிய (சரப்பணி) வேண்டும்.” அப்பொழுது அவருடைய இருதயம் பூரிப்பாகி அவர் நம்மை ஆசீர்வதிப்பார். இப்படி சபை ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்று உயர்த்தப்படுவதை இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அழகாயிருக்கிறது என்று கூறுகிறார்.

நீங்கள் முழு ஆத்துமாவோடும், அன்புகூர்ந்து, கட்டளைகளை கைகொண்டிருக்கிறீர்களா?

குறிப்பு வசனம் : ஆதி 20: 12,மத்தேயு 12: 50, உபாகமம் 11: 13

Loading...