Sermons

உன்னதப்பாட்டு 4 : 4

"உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.”

உலக பாரங்கள், உலக பாவங்கள் ஆகிய நுகம் நீக்கப்பட்டு, கிறிஸ்துவின் நுகமாகிய தேவ சித்தம் செய்தல் என்பதை, தனது கழுத்தில் ஏற்றுக்கொண்ட பராக்கிரமசாலியாக மணவாட்டி ருக்கிறாள் என்பதாக இயேசு கிறிஸ்து இந்த வசனத்தில் கூறுகிறார்.

வலிமையான மனிதர்களாகிய போர் வீரர்களின் கேடயம் மற்றும் கவசங்கள் முக்கியமானது. இந்த முக்கியமான போர்வீரர்களின் உடைமைகள் ஆயுத சாலைகளில் பாதுகாக்கப்படும். இந்த வசனம் தாவீதின் கோபுரம் போல் இருக்கிறதென்று இதை தாவீதின் நகரத்திற்கு ஒப்பிடுகிறது (2சாமு 5 : 7).

வேதத்தில் கழுத்தைப் பார்க்கும் போது, கழுத்து நுகத்தை சுமக்கிறதாக கூறப்படுகிறது. (ஓசியா 11 :  4, எரே 28 : 12, ஏசாயா 10 : 27). நுகம் என்பது மாட்டு வண்டியில் மாடுகளின் கழுத்தில் போடப்பட்டிருக்கும் மரத்தினாலான கட்டையைக் குறிக்கும். எரே 30 : 8 -ல் நுகம் என்பது அடிமைதனத்தைத் குறிக்கிறது. அந்த நுகத்தின் கட்டுகளை அறுப்பேன் என்று கர்த்தர் வாக்கு பண்ணுகிறார். இன்று அடிமைத்தன நுகம் நமது கழுத்திலிருந்து நீக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவினால் இலகுவான நுகம் கொடுக்கப்பட்டிருக்கிறது (மத் 11 : 30). அது கிறிஸ்துவுக்கு அடிபணியவும், கிறிஸ்துவினுடனே சித்தத்தை செய்து முடிக்கவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் பார்வையில் சபை இந்த நுகத்தை தனது கழுத்தில் ஏற்றி கொண்டு தாவீதின் கோபுரத்தை போல் இருக்கிறார்கள்.

மேலும், கழுத்து என்பது தலையையும் உடலையும் இணைக்கின்ற ஒரு பகுதியாக உள்ளது. வேதத்தில் இயேசு கிறிஸ்து நமக்கு தலையாகவும் (எபே 4 : 15), சபை சரீரமாகவும் (எபே 4 : 16) இருக்கிறதென்று கூறப்பட்டுள்ளது. சபையையும் இயேசு கிறிஸ்துவையும் இணைக்கின்ற இந்த கழுத்து மிகவும் வலிமையானதாக இருக்க வேண்டும். அதாவது கிறிஸ்துவோடு நமக்கு இருக்கிற ஐக்கியம், உறவு மிகவும் பலமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை இந்த பகுதி குறிப்பிடுகிறது. இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசு கிறிஸ்து ஆன்மீக ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து நமக்கு கொடுத்திருக்கிற முழுக் கவசத்துடன் நாம் சாத்தானின் சோதனைகளைத் தடுத்து கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டு நாம் பாதுகாக்க அழைக்கப்படுகிறோம். இதன் மூலம் கிறிஸ்துவோடு நமது ஐக்கியம் இன்னும் பெருகும்.

நீங்கள் கிறிஸ்துவின் நுகத்தை கழுத்தில் சுமக்க ஆயத்தமா?

குறிப்பு வசனம் :  நீதி 3: 22, ஓசியா 11: 4, எரே 28 : 12


Loading...