Sermons

உன்னதப்பாட்டு 4 : 3

"உன் உதடுகள் சிவப்புநூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம் பழம்போலிருக்கிறது.”

உதடுகள் மூலம் பாவமில்லாத வார்த்தை நம்மிடம் இருக்கவும் நம்மிடம் இருந்து புறப்படவும் வேண்டும். சிவப்பு நூல் இரத்தத்தைக் குறிக்கிறது. இயேசுவின் காயப்பட்ட சிவந்த கரங்களால் தொடப்பட்ட உதடுகளாக நமது உதடுகள் இருக்க வேண்டும். 

(1) உதட்டைக் குறித்து வேதத்தில் பார்க்கும் பொழுது    ஏசாயா 6 : 7 -ல் ஏசாயாவின் உதடுகள் கர்த்தரால் தொடப்பட்டப்பொழுது தனது பாவத்தை உணர்ந்து பரிசுத்தமாக்கப்பட்டான். அதன் பிறகு கர்த்தருடைய வார்த்தையை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அறிவிக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.

(2) மல் 2 : 6 -ல் கூறப்பட்டுள்ளது போல் கர்த்தருடைய சத்திய வசனம் மனிதனுடைய வாயில் இருக்கும் பொழுது அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படாது.

(3) எபி 13 : 15 -ல் இயேசு கிறிஸ்துவினால் தொடப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட ஜனங்களுடைய உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலி காணப்பட வேண்டும்.

சபையே, சிலுவையில் காயப்பட்ட இயேசுவின் சிவந்தக் கரத்தினால் நீங்கள் தொடப்படும் பொழுது, நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, ஸ்தோத்திர பலியைக் கிறிஸ்துவுக்கு செலுத்துவது அவருடைய பார்வையில் அருமையாய் இருக்கிறது.

"உன் வாக்கு ,இன்பமாயிருக்கிறது;” என்று சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால் கர்த்தரால் தொடப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட உதடுகளின்  வழியே வருகின்ற வாக்கு (வார்த்தை) கிறிஸ்துவுக்கு இன்பமாக இருக்கிறது. அதை வேதத்திலே பார்க்கும் பொழுது,

(1) நாம் கர்த்தருடைய கற்பனைகளைக் கைகொண்டு நடக்கும் பொழுது அவருடைய சந்தோஷம் நம்மில் நிலைத்திருக்கும் என்று யோவான் 15 : 10, 11-ல் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் நாம் கற்பனைகளைக் கைகொண்டு அவற்றை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் இது சபையாகிய நம் மேல் விழுந்த கடமை.

(2) நீதியுள்ள உதடு ராஜாக்களுக்குப் பிரியம் என்று நீதி 16 : 13 -ல் கூறப்பட்டிருக்கிறது. இன்று கிறிஸ்துவினால் நீதிமானாக்கப்பட்ட நாம் நீதியுள்ள வார்த்தைகளைப் பேசும் போது அவர் நம்மில் பிரியமாயிருப்பார்.

(3) சங் 50 : 23 -ல் ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான் என்று கர்த்தர் கூறுகிறார். ஆகையால் இயேசுவின் இரத்தம் பாய்ந்த கரத்தினால் உதடுகள் தொடப்பட்டு, அவ்வழியே வருகிற வார்த்தை பரிசுத்தமும், கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதும், ஸ்தோத்திர பலியோடு ராஜாவை பிரியப்படுகிற வார்த்தையாகவும் இருக்கிறது.

"உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம் பழம்போலிருக்கிறது.” இது தேவ பிரசன்னத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. சபையாகிய மணவாட்டியின்; முகம் கர்த்தருடைய பிரசன்னத்தினால் நிறைந்து காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. பவுல் இதைக்குறித்து புதிய ஏற்பாட்டில் விளக்குகிறப் பொழுது   2கொரி 3 : 13,14 ,ல் "ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.” ஏனென்றால் கிறிஸ்துவினாலே முக்காடு  நீக்கப்பட்டிருக்கிறது என்று  வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு இயேசு கிறிஸ்துவினாலே முக்காடு நீக்கப்பட்ட நமது கன்னங்கள் அதாவது நமது முகம் அவருடைய பார்வைக்கு மாதுளம்பழம் போல் அழகாக காணப்படுகிறது என்பதை கவிதை நடையில் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. நாம் முக்காடுப் போட்டு இருக்கிற இந்த உலகத்திற்கு நேராக நமது முகத்தைத் திருப்பாமல் எப்பொழுதும் நமது முகம் இயேசுவையே நோக்கி இருக்க வேண்டும். இயேசுவை மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்ற உறுதியுடனும் காணப்படவேண்டும். என் கன்னங்கள் இயேசுவுக்கு மட்டுமே திறந்திருக்கும் என்பதையும் இது குறிக்கிறது. இவ்வசனம் உன்னதப்பாட்டு 6 : 7 லும் சொல்லப்பட்டிருக்கிறது. 

இயேசு கிறிஸ்துவினால் தொடப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட நமது உதடு மற்றும் வார்த்தை கிறிஸ்துவின் பார்வையில் இன்பமாக இருக்கிறது. இந்த தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிற நாம் கிறிஸ்துவின் பணியில் நம்மை இணைத்து நமது உதடுகளும், வார்த்தைகளும் கிறிஸ்துவின் நாமத்தை பிரஸ்தாபப்படுத்தட்டும். அப்பொழுது நாம் கிறிஸ்துவின் பிரசன்னத்தில் வாழ்வோம். அது இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அழகாக இருக்கும்.

நீங்கள் பேசுகிற வார்த்தை, கிறிஸ்துவை மகிமைப் படுத்துகிறதா? தேவ பிரசன்னத்தை அனுபவிக்கிறீர்களா?

குறிப்பு வசனம் : சங் 119: 13,நீதி 10: 13,நீதி 16: 13, மத்தேயு 25: 23

Loading...