ஆயிரம் வருட அரசாட்சியில் வாழ்கிற ஜனங்களை பார்த்து கூறுவது
"சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், இராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.”
இந்த வசனத்தில் சியோன் குமாரத்திகளே! என்பது பழைய ஏற்பாட்டில் யூதர்களை குறிக்கும். புதிய ஏற்பாட்டில் எல்லா கிறிஸ்தவர்களையும் குறிக்கும். சாலொமோன் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் என்பதை முந்தைய வசனங்களில் பார்த்திருக்கிறோம். அவருடைய தாயார் என்பது மரியாளை குறிப்பிடவில்லை. அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடி என்பது ஆட்டுக்குட்டியானவரின் கலியாண நாளிலே அவருக்கு கிடைக்கிற பரலோக அங்கீகாரத்தை தான் இது குறிப்பிடுகிறது. பொதுவாக முடிசூடுவது என்பது ஒரு ஆளுமை பண்ண போகிற நபருக்கு தான் முடி சூட்டுவார்கள். எடுத்துக்காட்டாக, நாட்டின் ராஜா முடிசூட்ட படுவார் எதற்கு என்றால், அந்த நாட்டில் ஜனங்களை ஆள்வதற்கு. அதே போல தான் இங்கு, மணவாளனாக இயேசு கிறிஸ்து மாணவனாக முடி சூட்டப்பட்டு, இந்த பூமியிலே ஆயிரம் வருடம் அரசாட்சி செய்வதற்கு முடிசூட படுவதை தான் இந்தப் பகுதி குறிப்பிடுகிறது. யூதர்கள் முறைப்படி திருமணத்துக்கு பிறகுதான் ஒருவர் ராஜாவாக முடிசூட்டப்பட முடியும். அதேபோல் ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாணம் முடிந்து, அவர் ராஜாவாக முடி சூட்டப்பட்டு இருக்கிறார். அதை தான் இந்த வசனம் குறிப்பிடுகிறது.
இயேசு கிறிஸ்து சபையை இரகசிய வருகையில் எடுத்துக்கொண்டு, தனது மணவாட்டியை கல்யாணம் பண்ணுகிறதை வெளி 19 : 7 இல் "ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்." என்று சொல்லப்பட்டிருக்கிறது. பின்பு அவர் தனது மணவாட்டி, தோழர் மற்றும் தோழிகளோடு இந்த உலகத்திற்கு பகிரங்கமாக வந்து அந்திகிறிஸ்துவையும், அவனோடு சேர்ந்தவர்களையும் வென்று, 1000 வருட அரசாட்சியை இந்த உலகத்திலே தொடங்குவார்.
அந்நேரத்தில் வாழ்கிற ஜனங்களை பார்த்து சொல்லப்படுகிற வசனம் தான் இது. ஜனங்களே ராஜாவாகிய இயேசு கிறிஸ்து தனது மணவாட்டியை கல்யாணம் செய்து, தனது தோழர்கள் மற்றும் தோழிகளோடு அவர் பரலோக அங்கீகாரத்தை பெற்று, இந்த பூமியிலே அரசாட்சி பண்ண ராஜாதி ராஜாவாக வந்திருக்கிறார் அவரைப் போய் பாருங்கள் என்று சொல்லப்படுகிறது.
ஒரு நாள் நீங்கள் கிறிஸ்துவோடு மறுரூபமாக்கப்பட்டு இணைக்கப்படுவோம் என்ற விசுவாசம் இருக்கிறதா?
குறிப்பு வசனம்: எபி 13: 13,சங் 45 : 14,15, ஏசாயா 62:11,12,சகரி 9: 9, யோவான் 12: 12-15, வெளி 19: 7