இயேசு கிறிஸ்து பேசுவது
"எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.”
உன் 2 : 2 -இல் எனக்குப் பிரியமானவள் இருக்கிறாள் என்று இயேசுகிறிஸ்து சொல்லியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து சொல்லுகிறதாவது, (எருசலேமின் குமாரத்திகள் என்பது பழைய ஏற்பாட்டில் யூதர்களை குறிக்கும். புதிய ஏற்பாட்டில் எல்லா கிறிஸ்தவர்களையும் குறிக்கும்.) நீங்கள் என் மணவாட்டியைக் குழப்பாமலும், மணவாட்டிக்குத் தொந்தரவு கொடுக்காமலும் இருங்கள் என்பதாக அமைகின்றது (கலாத்தியார் 4: 29).
மணவாளன் வருகைக்கு ஆயத்தம் பண்ண விடாதபடிக்கு பல்வேறு விதமான கள்ள போதனைகளையும், உபதேசங்களையும் கொண்டுவந்து மணவாட்டியாக தங்களை ஆயத்தம் பண்ணுகிறவர்களை, புதிய ஏற்பாட்டில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லக்கூடிய சில எருசலேமின் குமாரத்திகள் கலங்க பண்ணுகிறார்கள் (2 பேதுரு 2:1). அதாவது அவர்களை சத்தியத்தில் வளர முடியாத படிக்கு தடை பண்ணுகிற ஒரு கள்ளப் போதனை உள்ள கிறிஸ்தவ கூட்டம், அவர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து எச்சரிக்கிறது தான் இந்த வசனம். தனது சொந்த ஜனங்களை அதாவது அவரை ஏற்றுக்கொண்ட ஜனங்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை 1சாமு 12 : 22 -,ல் பார்க்கிறோம். "கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்."
இயேசு கிறிஸ்து "வெளிமான்கள்மேலும்” என்ற வார்த்தையை சொல்லிக் கட்டளை கொடுக்கிறதை நாம் பார்க்கின்றோம். வெளிமான் ஒரு அமைதியான மிருகமாகும். அது வேட்டைக்காரனுக்குத் தப்பி வேகமாக ஓடுகிற ஒரு மிருகமாகும். எனவே இங்கு இயேசுகிறிஸ்து சபையை எல்லா சூழ்நிலையிலும் பாதுகாத்து, தப்புவித்துக் கொள்வதை வெளிமானுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார் (நீதி 6 : 5). அதேபோல் வெளியின் மரை என்பது வெளிமான்கள் இனத்தைச் சேர்ந்தது. அன்பானவர்களே! சபைக்கு என்னதான் துன்பங்கள், சோதனைகள் வந்தாலும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது சபையை கைவிட மாட்டார் என்பதற்கு இந்த வசனம் நமக்கு ஆதாரமாக இருக்கிறது.
இயேசு கிறிஸ்து எல்லாச் சூழலிலும் நம்மை காத்துக்கொண்டிருக்கிறார்
குறிப்பு வசனம்: உன் 2: 7, உன் 8: 4,1 யோவான் 1: 3