Sermons

உன்னதப்பாட்டு 2 : 13

"அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா.”

அத்திமரமும், திராட்சைக் கொடியும் சபையாகிய கிறிஸ்தவர்களைக் குறிப்பிடுகிறது. அத்திமரம் சபையின் வசந்த காலம் வருவதற்கான மற்றொரு அறிகுறி. மத் 24 : 32 -ல் இயேசு கிறிஸ்துவின் வருகை அத்திமரத்தின் உவமையால் சொல்லப்பட்டிருக்கிறது. "அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.” இங்கே சபையாகிய அத்திமரம் துளிர் விட்டு காய்காய்த்து விட்டதை  நாம் இந்த வசனத்தில் பார்க்க முடிகிறது. அதாவது சபை நல்ல கனிகளை கொடுத்திருக்கிறது. இயேசு கிறிஸ்து சொன்ன அந்தக் காலம் நிறைவேறிவிட்டது. சபை இயேசு கிறிஸ்துவினால் எடுத்துக்கொள்ளப்படும் நேரம் இது என்பதை குறிப்பிடுகிறது. 

அதேபோல் திராட்சைக் கொடி சபையை குறிப்பிடுகிறது (யோவான் 15 : 5).  திராட்சைக் கொடிகள் மிகவும் பலவீனமானவை மற்றும் தங்களைத் தாங்களே தாங்கிக்கொள்ள முடியாதவை, ஏதாவது ஒரு இடத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டியவை, வேறு ஏதாவது ஒன்றை எப்பொழுதும் சார்ந்திருக்கும்; அவ்வாறு சார்ந்திருப்பதால், அதிக உயரம் வளரும், மற்றும் பூப்பூத்து வாசனையும் கொடுக்கும். அதே நேரத்தில் அதிக பழம் தரும். அதேப் போல் சபையாகிய கிறிஸ்தவர்கள் தங்களுக்குள் பலவீனமானவர்கள். தங்களை தாங்களே சார்ந்து வளர முடியாது. கனிகள் தங்கள் வாழ்வில் கொடுக்க முடியாது. அவர்களின் பலம் கிறிஸ்துவில் உள்ளது, அவர்கள் அவரால் நிலைநிறுத்தப்படுகிறார்கள், அவர்கள் அவரைச் சார்ந்திருக்கிறார்கள்; அவரால் ஆதரிக்கப்படுவதால் அவர்கள் கிறிஸ்துவின் முழுமையின் நிலைக்கு வளர்கிறார்கள்; மேலும் அவர்கள் அவரைச் சேர்வதன் மூலமும், அவரிடத்தில் உண்மையான கொடியாய் நிலைத்திருப்பதன் மூலமும், கிறிஸ்துவில் வாசனை வீசுகிறவர்களாக மாறுகிறார்கள். கிறிஸ்துவின் மகிமைக்கு அதிகப்படியான கனிகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவில் இருப்பதால் அவர்கள் என்றென்றும் அவரிடம் நிலைத்திருப்பார்கள், என்றென்றும் அழிய மாட்டார்கள், ஆனால் நித்திய ஜீவனைப் பெறுகிறார்கள்.  

இப்பொழுது இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து "என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா”  என்று அன்பாக கூப்பிடுகிற சத்தம் ஒருநாள் மத்திய ஆகாயத்தில் தொனிக்கும். அப்பொழுது சபையாகிய நாம் அவரோடு செல்வதற்கு தகுதியைப் பெற்றுக்கொள்வோம். நாம் கிறிஸ்துவுக்குள் கனி கொடுப்பவர்களாக மாறுவோம்.

இந்த சத்தத்தை கேட்பேன் என்கிற விசுவாசம் இருக்கிறதா?

குறிப்பு வசனம்:   ஏசாயா 18: 5


Loading...