1 பேதுரு 2:3 "நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்."
நாம் எல்லோரும் குழந்தைகளாக இருந்தவர்கள், ஒரு குழந்தை வளர்வதற்கு என்ன தேவை என்பதை அறிந்தவர்கள். குழந்தை வளர்ந்து பக்குவமடைய வேண்டியது அவசியமாயிருக்கிறது. இதை நாம் எல்லோரும் உணர்ந்து இருக்கிறோம்.
ஆவிக்குரிய குழந்தைகளின் நிலையும் இதுதான். தேவனுடைய ராஜ்யத்தில் நாம் முதலில் மறுபடியும் பிறக்கின்றோம். புதிதாய் பிறக்கின்ற குழந்தையைப்போலத்தான் நம் நிலையும் இருக்கின்றது. ஆவிக்குரிய பெலன் நமக்குள் இருக்காது. ஆவிக்குரிய முதிர்வு நமக்குள் வளர்ந்திருக்காது.
இந்தப் புதிய சூழலில், நாம் நிறைய தவறுகளைச் செய்வோம். அப்படித்தான் நாம் எல்லோருமே ஆரம்பிக்கின்றோம்.ஆனால் நாம் அதே நிலையில் இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புவதில்லை. நாம் வளர்ந்து பக்குவப்பட வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கின்றார். ஆகையால்தான், நாம் வளரும்படி, தேவனுடைய வார்த்தையாகிய பாலை வாஞ்சையாய் பருக வேண்டும் .நாம் வளர வேண்டும் என்பதற்காகவே, தேவன் தம் வார்த்தையை நமக்குத் தந்திருக்கிறார்! அவருடைய வார்த்தையாகிய ஊட்டத்தை நாம் உட்கொள்ள வேண்டும் என்று அவர் நோக்கமாயிருக்கிறார். ஆமென்.