சங்கீதம் 139 :24 . வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்
தாவீது தெளிவாக என்னை ஆராயும் என்று ஜெபிப்பதைக் காண்கிறோம்.;என்னை என சொல்லும்போது என்னுடைய முழுமையும் அடங்குகிறது. இவ்வுலக வாழ்வில் என் வாழ்வுமுறை, என் ஆவிக்குரிய ஜீவியத்தில் தேவனுக்கும் எனக்குமுள்ள உறவுமுறை, என் உடை, நடை, பழக்க வழக்கங்கள், நட்புகள், செய்யும் தொழில் என்று இதனை அடுக்கிக்கொண்டே போகலாம். என்னை நானே வெறுத்து என் சிலுவையை எடுத்துக்கொண்டு என் ஆண்டவர் நடந்த வழி நடக்கிறேனா? தேவனே, என்னை ஆராயும் என்று நம்மை ஒப்புவிப்போம்.
தாவீது குறிப்பாக தன் இருதயத்தை ஆராய்ந்து அறியும்படி ஜெபிக்கிறார். நமது வெளிவாழ்விலே நம்மை உத்தமர்களாகக் காட்டிக்கொள்ள எவ்வளவுதான் பிரயத்தனம் எடுத்தாலும், நமது இருதயத்தின் உண்மை நிலை தேவனுக்கு மாத்திரமே தெரியும். ;நானே இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன் (எரே.17:10) என்கிறார் கர்த்தர்.
தேவனை அண்டிச் சேரும்படி நம்மை ஒப்புக் கொடுப்போமாக. உண்மையுள்ள வாழ்வு, சுத்த இருதயம், ஆரோக்கியமான சிந்தனைகள், வேதம் காட்டும் வழி இவற்றை நாடுவோமாக. அப்போது பரிசுத்தாவியானவர் நம்மை நித்திய வழியிலே தாமே முன்னின்று நடத்துவார். குற்ற மனச்சாட்சியற்ற வாழ்வு வாழ பரிசுத்தாவியானவர் நம்மைத் தாங்குவாராக. ஆமென்.