சபை, இயேசுவை கிறிஸ்துவை நோக்கி சொல்கிறது
"நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர் நம்முடைய மஞ்சம் பசுமையானது.”
சபையாகிய கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் அழகையும், அன்பையும் அவரால் கிடைக்கிற இளைப்பாறுதலையும் நினைவு கூர்ந்து பாடுகிற பாடல் இது.
நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; வேதத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழகு குறிப்பிடப்பட்டுள்ளது. (சங் 45 : 2, சகரி 9 : 17). இன்பமானவர் என்றால் நேசிக்கப்படக்கூடியவர் என்று அர்த்தம். மணவாளனால் சபையினுடைய இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது. எனவே சபை சொல்கிறது அவர் இன்பமானவர் என்று.
இந்த வசனத்தில் சபை "நம்முடைய மஞ்சம் பசுமையானது” என்று சபைக்கும், கிறிஸ்துவுக்கும் இடையே இருக்கும் உறவின் வலிமையைக் கூறுகிறார்கள். மஞ்சம் என்பது படுக்கையை குறிக்கிறது. படுக்கை என்பதின் ஆவிக்குரிய அர்த்தம் இளைப்பாறுதல். அதாவது இங்கு ஆத்தும இளைப்பாறுதல் குறித்து பேசப்படுகிறது. இந்த உலகத்திலே, சரீரத்திலே சில பாடுகள் இருந்தாலும், நமது ஆத்தும நேசராகிய இயேசு கிறிஸ்து நமக்கு ஆத்மாவில் தருகிற இளைப்பாறுதல் பசுமையானது. பசுமை என்பது செழுமை, சுகவாழ்வை குறிக்கும்.
இன்று இயேசு கிறிஸ்துவினால் சபையாகிய நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது. மத் 11 : 28-ல் "வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்துவை நாம் அண்டிக்கொள்கிறப் பொழுது நிச்சயமாக அவர் நமக்கு இளைப்பாறுதல் கொடுப்பார். இந்த வசனம் நாம் இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து இருக்கிறதைக் குறிப்பிடுகிறது. நாம் கிறிஸ்துவினால் இந்த உலகத்திலும் இளைப்பாறுதல் பெற முடியும். அதே நேரத்தில் நித்திய இளைப்பாறுதலையும் அவர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
கிறிஸ்துவின் இளைப்பாறுதலை பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்களாக இருக்கிறோமா? சிந்திப்போம்.
குறிப்பு வசனம் : சங் 45: 2, சகரி 9: 17, பிலி 3: 8