மணவாளன் சபையைக் குறித்துப் பாடுவது
"என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.”
இயேசு கிறிஸ்துவின் சபை ஆவிக்குரிய காரியத்தில் அழகுள்ளவர்களாக இருப்பதை பார்த்து, கிறிஸ்து அவர்களை பரிசுத்தத்துக்கும், கபடற்ற தன்மைக்கும் ஒப்பிட்டு புகழ்ந்து பாடுகிறார். "என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி".
சபை கிறிஸ்துவின் பார்வையில் என்றுமே அழகுதான். இது கவிதை என்பதால் நீ ரூபவதி, நீ ரூபவதி என்று இரண்டு முறை சொல்வதால் சபையின் முக்கியத்துவத்தைப் பிரதிப்பலிக்கிறது. சபை மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமானவள். ஏன் பிரியமானவள்? ஏனென்றால் அவள் ரூபவதி. ஏன் ரூபவதி? ரூபவதி என்றால் அழகுள்ளவர் என்று அர்த்தம். எதனால் அழகுள்ளவள்? இதற்கு முந்தைய வசனங்களில் நாம் பார்த்தது போல், அவள் ஆவிக்குரிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். இருதயத்தில் மறைந்திருக்கும் குணத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். வார்த்தையாக பொண்ணினாலும், வார்த்தையாக வெள்ளினாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கிறாள். இப்படி ஆவிக்குரிய அலங்காரம் உள்ளவளாக இருப்பதினால், அவள் ரூபவதி என்று சொல்லப்படுகிறது. மேலும் மணவாளனாகிய இயேசு கிறிஸ்து சபையை பார்த்து கூறுகிறார். இரட்சிக்கப்பட்ட என் ஜனமே, உனக்கு ஒப்பானவன் ஒருவனும் இல்லை என்று பேசுகிறார். (உபாகமம் 33:29, பிரசங்கி 8:1)
உன் கண்கள் புறாக்கண்கள். இயேசு கிறிஸ்து சபையை புறாக் கண்களுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். புறா என்றைக்குமே சமாதானத்துக்கும், ஒரு கபடமற்ற தன்மைக்கும் (மத் 10 : 16) அடையாளமாக வேதத்தில் காட்டப்படுகிறது. மேலும் மணவாளனாகிய கிறிஸ்து இங்கே சபையை குறித்து சாட்சி கொடுக்கிறார். வேதத்திலே இயேசு கிறிஸ்து நாத்தான்வேல் என்கிற ஒருவரை குறித்து கபடத்தவன், உத்தமன் என்று சொல்லி இருக்கிறதை பார்க்கிறோம். யோவான் 1: 47 ,ல் இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
ஒரு மனிதனுடைய உறுப்புகளில் கண் மிகவும் முக்கியமானது, வேதமும் கண்ணை முக்கியப்படுத்திக் கூறுகிறது. கண்ணானது சரீரத்தின் விளக்காய் இருக்கிறது என்று லூக் 11 : 34 -ல் பார்க்கிறோம். மனிதனுடைய பார்வைத் தெளிவாக, அதாவது பரிசுத்தமாக இருந்தால் சரீரம் முழுவதும் வெளிச்சமாக இருக்கும் என்று இந்த வசனம் குறிப்பிடுகிறது. ஒருவேளை கண்களில் குறைபாடு இருந்தால் எல்லாம் இருளாக தோன்றும். அதுபோலவே ஜனங்களுடைய ஆவிக்குரிய கண்கள்; அதாவது அவர்களுடைய மனநிலைகள், நோக்கங்கள், ஆசைகள் போன்றவை தேவனுடைய சித்தத்திற்கு நேராக திருப்பப்பட்டிருந்தால், அவருடைய வார்த்தை என்னும் ஒளி அவர்களுடைய இருதயங்களில் பிரவேசித்து ஆசீர்வாதங்களையும், நற்கனிகளையும், இரட்சிப்பையும் கொடுக்கும். ஆனால் நமது ஆசைகள் தேவனுடைய காரியங்களில் இல்லாவிட்டால் தேவனுடைய வெளிப்பாடு, சத்தியம் பிரயோஜனமில்லாமல் இருக்கும்.
புறா நமக்குத் தெரியும் அது பரிசுத்தத்தையும், கபடமற்ற நிலைமையும் குறிக்கிறது. ஆண்டவர் நம்மை அந்த நிலைமையில் ஒவ்வொருவரையும் பார்க்க ஆசைப்படுகிறார். ஆகவே நம்மை அவர் இவ்வாறு அழைக்கிறார். இயேசு கிறிஸ்து சபையைப் பார்த்து சொல்கிறதாவது, சபையே! நீ சமாதானம் பெற்றவள், சபையே! நீ பரிசுத்தமானவள், சபையே! நீ பொறுமையானவள், சபையே! நீ கபடற்றவள், சபையே! நீ அழகுள்ளவள் என்று புறாக் கண்களுக்கு சபையை ஒப்பிட்டுப் பேசுவதை நாம் பார்க்கிறோம்.
உங்கள் கண்கள் கபடற்றதாக இருக்கிறதா?
குறிப்பு வசனம் : எண் 23: 21, உன் 4: 1