"ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.”
இந்த வசனம் எசேக் 16 : 11,12 -ல் சொல்லப்பட்டிருக்கிற "கர்த்தருடைய வார்த்தையின் வெளிப்பாடு." இயேசு கிறிஸ்து சபையின் அழகைக் குறிப்பிடுகிறார். மணமகள் ஆபரணங்களை அணிவது என்பது, ஏற்கனவே தாம் கொண்டிருக்கும் அழகை விட மிகவும் தகுதியானவராகவும், அழகானவராகவும் காட்டுவதாகும்.
"ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்கள்” என்பது புத்துணர்ச்சியையும், சபையின் மென்மையையும், சபையின் அழகையும் குறிக்கும் அடையாளமாகும். கிறிஸ்துவின் பார்வையில் விசுவாசிகள் பூமியில் சிறந்தவர்கள். ஒவ்வொரு உண்மையான விசுவாசிக்கும் கிறிஸ்து அளிக்கும் ஆன்மீக பரிசுகளும் (ஆவிக்குரிய வரங்கள்), கிருபையும் ஆபரணங்களால் விவரிக்கப்படுகின்றன. இங்கே கர்த்தர் தன்னுடைய ஜனங்களை சுத்திகரித்து, இரத்தத்தினால் கழுவி, அதாவது பாவத்திலிருந்து விடுவித்து அவர்களை தன்னுடைய ஆவியினால் அபிஷேகம் செய்வதை எசேக் 16 : 9 -ல் பார்க்க முடியும். இது ஒரு புதிய உடன்படிக்கையாகும். அதன் பிறகு தன்னுடைய மணவாட்டிக்கு தேவையான நல்ல வஸ்திரமும், ஆபரணங்களில் அலங்கரித்து, கழுத்திலே சரப்பணியை போட்டு காதுகளில் காதணியையும் தரித்து அழகுப்பார்க்கிறார். மேலும் இது பெண்களின் காதணி தங்கள் கன்னங்கள் வரை அழகாக அணியப்படும் ஆபரணம். வேதம் இதை மணவாட்டியாவதின் தகுதி பரிசாக சித்தரிக்கிறது. ஈசாக்கு மணவாட்டியாகப் போகிற ரெபெக்காளுக்கு பொன் காதணி கொடுக்கப்பட்டதை ஆதி 24 : 22, 47 -ல் நாம் பார்க்கிறோம். இன்று இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபைக்கு தகுதி பரிசாக இரட்சிப்பு, பரிசுத்தம், அபிஷேகம், ஆவியின் கனிகள், ஆவியின் வரங்கள் மற்றும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய வாழ்க்கை கொடுக்கப்படுகிறது.
"ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது” கிருபையும், சத்தியமும் நிறைந்த இயேசுகிறிஸ்து நமக்குள்ளே வாசம்பண்ணி, ஜீவனுள்ள வார்த்தை நமது இருதயமாகிய பலகையில் இருப்பதை இந்த வசனம் விளக்குகிறது. இது மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அழகாயிருக்கிறது. எப்படியெனில், நீதிமொழிகள் 3 : 3 - ,ல் "கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்." என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதாவது கழுத்திலே கிருபையும், சத்தியமும் இருக்க வேண்டும் என்பதாக இந்த வசனம் கூறுகிறது. கிருபையும், சத்தியமும் எதைக் குறிக்கிறது? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறிக்கிறது. யோவான் 1 : 14 - ,ல் "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; " என்று இயேசு கிறிஸ்துவை கூறுகிறதை நாம் பார்க்கிறோம்.
மேலும் கழுத்தில் அணியப்படும் தங்க சங்கிலி, பொதுவாக மனிதர்கள் தாமாகவே அணிவது உண்டு. அதே வேளையில் அதை ஒரு இராஜாவோ அல்லது ஒரு மணவாளன் தனது மணவாட்டிக்கு அணிவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆதி 41 : 42 -ல் பார்வோன் யோசேப்புக்கு அணிவிக்கிறான். அதேப்போல் இராஜாவும், மணவாளனுமாகிய இயேசு கிறிஸ்து சபையாகிய நமக்கு சரப்பணியை அணிவித்து நம்மை உயர்த்துகிறார். அதுபோல் கழுத்து மனிதனின் தலையையும், சரீரத்தையும் இணைக்கும் ஒரு பகுதி. இங்கு தலை இயேசு கிறிஸ்துவாகவும், சரீரம் சபையாகவும் பார்க்கும் பொழுது இதை இணைக்கிற மாலைகள் அணிந்த கழுத்தை (கிறிஸ்துவோடு உள்ள ஐக்கியத்தை) மணவாளன் புகழ்ந்து பாடுவதைப் பார்க்கலாம். இப்படி சபை ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்று உயர்த்தப்படுவதை இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அழகாயிருக்கிறது என்று கூறுகிறார்.
நீங்கள் கிறிஸ்துவின் பார்வையில் அழகாய் இருக்கிறீர்களா?குறிப்பு வசனம் : ஆதி 24: 22, 47, ஆதி 41: 42, எசேக் 16: 11,13