Sermons

உன்னதப்பாட்டு 1 : 9

"என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.”

முந்தைய வசனத்தில் "ஸ்திரீகளில் ரூபவதியே” என்று அழைத்த கிறிஸ்து, இந்த வசனத்தில் "என் பிரியமே” என்று சபையை அழைக்கிறார். சாலொமோன் குதிரைகளை எகிப்திலிருந்து (பார்வோனிடமிருந்து) வாங்கியதை 2நாளா 9 : 28 -ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் பரிகள் என்றால் குதிரை என்று அர்த்தம். பவுஞ்சு என்றால் படைகள் அல்லது சேனைகள் என்று அர்த்தம் .

கிறிஸ்துவின் சபை தங்கள் வலிமை, கம்பீரம் மற்றும் அழகிற்காக "குதிரையுடன்” ஒப்பிடப்படுகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவிலும், அவருடைய கிருபையிலும், அவர் நிமித்தம் கஷ்டங்களையும், நிந்தைகளையும், துன்புறுத்தல்களையும் தாங்குவதற்கும், கர்த்தருடைய எதிரியாகிய சாத்தானை எதிர்த்துப் போராடுவதற்கு துணிச்சலுள்ளவர்களும், கம்பீரமானவர்களுமாகவும் இருக்கின்றனர்.  அதேபோல் குதிரை ராஜாவை தன்னுடைய இரதங்களில் ஏற்றி பவனியாக எல்லா இடங்களிலும் கூட்டிச் செல்கின்ற ஒரு காரியத்தைச் செய்கிறது, "இரதம் என்பது இரட்சிப்பைக் குறிக்கிறது” (ஆபகூக் 3 : 8). இன்று இயேசுகிறிஸ்து சபையைப் பார்த்து சொல்லுகிறதாவது, சபையே உன் மூலமாகத்தான் மற்ற ஜனங்களை இரட்சிக்கிறேன். அதாவது என் பிரியமே உலகெங்கும் நான் போக விரும்பும் இடங்களுக்கு எல்லாம் என்னைக் கொண்டுப் போக வேண்டியது நீதான் சபையே, சுவிசேஷம் இல்லாத இடங்களுக்கு நீ தான் கொண்டுப் போக வேண்டும்.  

அன்பானவர்களே! சபையாகிய நாம் இரட்சிப்பென்னும் இரதத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறவர்களாக நம்மை அர்ப்பணிப்போம். கிறிஸ்து நமக்கு அதற்குரிய பெலனையும், கிருபையையும் தந்து வழி நடத்துவார்.

நீங்கள் சுவிசேஷத்தை அறிவிக்கிறீர்களா? நீங்கள் மற்றவர்களை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்துகிறீர்களா?

குறிப்பு வசனம் : 1 இராஜாக்கள் 10: 28,    2நாளா 1: 14-17, சகரியா 10: 3


Loading...