"நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்.”
"நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவேன்; எருசலேம் தான் எல்லோருக்கும் மேலான தாய் (கலாத்தியர் 4 : 26). மேலும் ஆவிக்குரிய எருசலேம் என்பது சபையை குறிக்கும். இந்த வசனத்தில் தாய் வீடு என்பது சபையை குறிக்கும். இயேசு கிறிஸ்து இந்த கிருபையின் காலத்தில் சபைக்கு வருவதை இந்த வசனம் விளக்கிக் காட்டுகிறது.
"நீர் என்னைப் போதிப்பீர்” இயேசு கிறிஸ்து எல்லா விதத்திலும் இன்று நம்மை போதித்துக் கொண்டு இருக்கிறார். மாற்கு 1 : 21 ,ல் "பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வு நாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இயேசு கிறிஸ்து சபையில் பிரசங்கிப்பதை, இந்த வசனம் நமக்கு விளக்கிக் காட்டுகிறது. கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகர் என்று மத்தேயு 23 : 8 இல் சொல்லப் பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டு சபையில் வந்திருக்கிற இயேசு கிறிஸ்து, ஏதோ ஒரு விதத்தில் நம் ஒவ்வொருவரையும் போதித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
"கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன்” கந்தவர்க்கம் என்பது ஒரு வாசனையை குறிக்கிறது. மேலும் சபை தன்னை திராட்சரசம் மற்றும் மாதுளம்பழரசத்தோடு ஒப்பிடுகிறதை பார்க்கிறோம். ஓசியாவின் மூலம் கர்த்தர், "நான் இஸ்ரேலைக் கண்டபோது, அது வனாந்தரத்தில் திராட்சைகளைக் கண்டுபிடிப்பது போல் இருந்தது" (ஓசியா 9 : 10) என்று கூறினார். இயேசு கிறிஸ்துவின் போதனைகளால் சபை கனி கொடுக்கக் கூடியதாய் மாறுகிறது என்பதை இந்த பகுதி நமக்கு விளக்கி காட்டுகிறது. அதாவது ஆவிக்குரிய கனியை சபை இங்கே கூறுகிறது. அப்படிப்பட்ட கனிகளால் கிடைத்த பழரசத்தை மணவாளனுக்கு கொடுப்பேன், அதாவது கனிகளாகிய நற்குணங்களை அன்பின் வடிவில் மணவாளனுக்கு கொடுப்பேன் என்பதாக சபை இங்கே கூறுகிறது. குடிக்க கொடுப்பேன் என்பது அதன் பலனை கொடுப்போம் என்பதாக அமையும். அதாவது நீங்கள் எந்த நோக்கத்திற்காக சபையை உருவாக்கி, எங்களுக்கு போதிக்கிறீர்களோ, அதற்கான பலனை நாங்களும் எங்கள் விசுவாசத்தின் மூலம் உமக்கு கொடுப்போம் என்பதாக சபை, இயேசு கிறிஸ்துவைப் பார்த்துக் கூறுகிற வார்த்தை ஆகும்.
நீங்கள் கிறிஸ்துவுக்கு சிறப்பான பலனை கொடுக்க ஆயத்தமா?
குறிப்பு வசனம்: எண் 13 : 23-26, கலா 4 : 26, யாத் 4 : 12, ஏசா 28 : 26