"ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள்.”
"ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால்,” என்பதற்கு மணவாட்டியாகிய சபை (என்) இயேசு கிறிஸ்துவுக்கு (நீர்) ஆவிக்குரிய சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும், கிறிஸ்துவுக்கு மணவாட்டியாகவும் இருக்கிறார்கள். ஆனால் இந்த வசனத்தில் சபையாகிய மணவாட்டிக்கு எழுகிற கேள்வி என்னவென்றால், நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், அதாவது, நாங்கள் இயேசு கிறிஸ்துவின் உடன் பிறந்த சகோதரர்களாக இருந்திருக்க கூடாதா என்று அங்கலாய்க்கிறார்கள். அதாவது மாற்கு 6 : 3 ,ல் சொல்லப்பட்டிருக்கிறது போல, நாங்கள் இயேசுவின் உடன் பிறந்த சகோதர்களாகிய யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் போல் இருந்திருக்கக் கூடாதா என்பதாக கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் முழு இஸ்ரவேலரும் இயேசுவின் சகோதரர்கள் இந்த முறைமையில் வருவார்கள். சபை இயேசு கிறிஸ்துவின் உடன்பிறந்த சகோதரர்கள் அல்ல, ஆவிக்குரிய சகோதரர்கள் ஆவார்கள் (மாற்கு 3:35). இதை தான் மணவாட்டி ஆகிய கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.
"நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்” முத்தம் என்பது அன்பை குறிக்கிறது (லூக்கா 7:45-47, லூக்கா 15:20, 1 பேதுரு 5:14). இயேசுவோடிருக்கும் அன்பின் ஐக்கியத்தைக் குறிக்கிறது. முத்தம் என்பது இயேசு கிறிஸ்துவிடம் சேர்வது. குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு அவரை முத்தம் செய்ய வேண்டும் என்று சங்கீதம் 2 : 12 -வது வசனம் சொல்கிறது. அதாவது சகோதர அன்பை வெளிப்படுத்துவதை இது சுட்டிக் காட்டுகிறது.
"என்னை நிந்திக்கவுமாட்டார்கள்” இன்று நாம் வாழும் உலகில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதால், நம்மை சுற்றி இருக்கிற ஜனங்களாலும், மற்றவர்களாலும் நமக்கு நிந்தனை உண்டு என்பதை சபை இங்கே கூறுகிறது. மத்தேயு 5 : 11 இல் சொல்லப்பட்டிருப்பது போல "என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்". மணவாட்டி சபைக்கு இந்த உலகத்திலே சில பாடுகள் உண்டு என்பதை வேதம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
நாம் அவருடைய மணவாட்டி என்பதைக் குறித்து சந்தோஷமாக இருப்போம். மனிதர்களுடைய நிந்தையும், அவர்களுடைய பார்வைகளும் முக்கியமல்ல. கிறிஸ்துவின் பார்வை தான் நமக்கு முக்கியமானது. ஏனென்றால் கிறிஸ்துவின் அரசாட்சியில் அவர் நமது நிந்தைகளை எடுத்து போடுவேன் என்று நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார். ஏசாயா 25 : 8 இல் "அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.” கர்த்தருடைய வார்த்தையில் உறுதியாயிருந்து மகிழ்ச்சியாய் இருப்போம்.
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்பதில் உறுதியாய் இருக்கிறீர்களா?
குறிப்பு வசனம்: ஏசா 41 : 6, ஏசா 66 : 5, சகரி 7 : 9, 10, மல் 2 : 10