"அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்;; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.”
"அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்” என்பதற்கு சபை ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுடன் அதிகாலையில் (முதலாவது) ஐக்கியப்பட்டு அந்த நாளை தொடங்க வேண்டும் என்பதாகும். அவரை முன்கூட்டியே விடா முயற்சியுடன் தேட வேண்டும். ஒரு தேடல் உள்ள ஆத்துமா, தன்னிடம் குறைவோடு இருந்து இயேசு கிறிஸ்துவோடு தொடர்பு கொள்ளும் போது, அந்த ஆத்துமாவின்; குறைவுகள் மாறி மகிழ்ச்சி உருவாகிறது. திராட்சத் தோட்டம் என்பது ஆத்மாவை குறிப்பிடுகிறது. தேவனுடைய ராஜ்ஜியம் திராட்சத் தோட்டத்திற்கு ஒப்பிடப்படுகிறது. தேவ ராஜ்ஜியம் இன்று "நமக்குள் இருக்கிறது” என்று (லூக் 17 : 21) சொல்லப்படுகிறது. பூமிக்குரிய எந்த பொருளாலும் ஆத்துமாவை திருப்தி அடைய வைக்க முடியாது. ஆத்துமா தோட்டத்திற்கு ஒப்பிடப்படுகிறது (எரே 31 : 12, ஏசா 58 : 11). எனவே பயனுள்ள மரங்களும், செடிகளும் நடப்பட வேண்டும். நீதியின் பலனை பெற்றிருக்கிறோமா என்று அடிக்கடி ஆராய்ந்து பாரக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கிறிஸ்துவை உங்கள் ஆத்தும தோட்டத்திற்குள் கூட்டிச் செல்லுங்கள்.
"திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்” கிறிஸ்துவின் பிரசன்னம் திராட்சைக் கொடியை செழிக்கச் செய்யும். திராட்சக்கொடி என்பது சபையாகிய தேவ பிள்ளைகளைக் குறிக்கும் (யோவான் 15 : 5). தினமும் அதிகாலையில் கிறிஸ்துவை முழுமனதோடு தேடுவதின் மூலம் திராட்சக்கொடியாக சபை துளிர்த்து, கனிகொடுக்கிற வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்தப்பட்டு (பூ மலருகிறது) பின்பு கனிகொடுப்பார்கள். மாதளஞ்செடி என்பது சபை வளர்ந்து கனிகொடுப்பதை பிரதிபலிக்கிறது. சபை அவரைத் தனது ஆத்துமத் தோட்டத்தில் கூட்டிச் செல்வதால் நீதியின் சூரியன் தோட்டத்தில் உதித்து சபை கனிகொடுக்கிறது.
மேலும் ஏசாயா 27: 6 இல் "யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்." என்று தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தீர்க்கதரிசன வார்த்தையின் அடையாளமாக தேவ ஜனங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்திருக்கிறார்களா? என்று பார்ப்போம் என்று ஒரு கேள்வி சபையினால் வைக்கப்படுகிறது.
"என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.” இயேசு கிறிஸ்துவின் மீது இருக்கிற அன்பினால் சபை இங்கே பேசுகிறது. இயேசுவே உமது கிருபையின் அன்பினால் செய்த ஊழியத்தால் விளைந்த உச்சிதங்களைப் பாரும் என்றும், அதை நேசருக்கு தருவேன் என்றும், சபையாகிய கிறிஸ்தவர்கள் ஆண்டவரிடம் கூறுகிற வார்த்தையாகும்.
அன்பானவர்களே! நாம் இயேசு கிறிஸ்துவை தேடும்பொழுது, நமது ஆத்துமத் தோட்டம் செழிப்படைந்து, அதின் மூலம் நல்ல கனி கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
நீங்கள் அன்பினால் செய்த ஊழியத்தால் விளைந்த பலன்களை நேசருக்கு கொடுக்கிறீர்களா?
குறிப்பு வசனம்: நீதி 8 : 17, மாற்கு 1 : 35