Sermons

உன்னதப்பாட்டு 1 : 8

மணவாளனாகிய ,இயேசுகிறிஸ்து சபையுடன் பேசுவது

"ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.”

"ஸ்திரீகளில் ரூபவதியே!” என்று முதல் தடவையாக உன்னதப்பாட்டில் மணவாளன் பேசுகிறார். சாலொமோன், தீர்க்கதரிசனமாக இயேசுவானவர் சபையை எப்படி அழைக்க விரும்புவார் என்று  வர்ணித்திருக்கிறதைப் பாருங்கள். இவ்வுலகில் எத்தனையோ மக்கள் தீமையான எண்ணங்களோடும் செயல்களோடும் வாழ்கிறதைப் பார்க்கிறோம். மணவாளனாகிய இயேசு கிறிஸ்து இன்றைய சபையைப் பார்த்து என்னை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களே! உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று இயேசு கிறிஸ்துவுக்கு சபையின் மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறார். முந்தைய வசனத்தில் சபையாகிய கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவிடம் ஒரு கேள்வி கேட்கிறதை நாம் பார்த்தோம். அந்தக் கேள்விக்கான பதிலை இந்த வசனத்தில் சொல்வதை நாம் பார்க்கலாம். 

நான் எப்படி என் மந்தைகளை மேய்க்கிறேன் என்று நீ அறியாமல் இருப்பாயானால், "மந்தையின் (இவ்வுலகத்தில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட விசுவாசிகளின்) காலடிகளை தொடர்ந்து போய்”, இவ்வுலக மேய்ப்பர்கள் (Pastors), கூடாரங்கள் (Church) அண்டையில் ஆட்டுக் குட்டிகளை (விசுவாசிகளை) மேயவிடு என்று சொல்கிறார். யோவான் 10: 27 -ல்  என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. ஏன் இயேசு கிறிஸ்து இவ்வாறு சொல்லுகிறார்?  உன் வேத அறிவு வளர வேண்டுமென்பதற்காக. உன்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பதிலை நான் தர வேண்டுமானால், நான் சபை மேய்ப்பர்கள் மூலமாகத்தான் அதைக் கொடுக்கிறேன் என்பதாக இது அமைகிறது. முந்தைய வசனத்தில் சபையாகிய கிறிஸ்தவர்கள் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு இயேசு, உன்னுடைய  எல்லா கேள்விக்கும் வேத புத்தகத்தில் பதில் உண்டு.  நீ என் பார்வையிலே எப்படி இருக்கிறாய் என்பதை வேதத்தில் சொல்லியிருக்கிறேன். அதைத் தெரிந்து கொள்ளுங்கள்.  உங்கள் சபை மேய்ப்பர்கள் மூலம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அதற்காகத் தான் சபையிலே மேய்ப்பர்களை ஏற்படுத்தி இருக்கிறேன். நீ போய் அங்கே உன் மந்தைகளை மேயவிடு என்பதாக கூறுகிறார். உன் மேல் நான் வைத்திருக்கும் அன்பு எவ்வளவு என்பதை அறிந்து கொள்வாய். என் ரூபவதியே! என்று கிருபையின் காலத்தில் வாழ்கிற நம் மீது வைத்திருக்கும் அன்பை அவர் கூறுகிறார். ஆவிக்குரிய வளர்ச்சியில் மணவாட்டி அடைந்திருக்கும் அழகை, "ரூபவதி” என்று பாவிக்கிறார்.

சபை இன்று கர்த்தருடைய வார்த்தைகளை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.  அநேக திருச்சபைகள் இன்று இந்த பணியை செய்யத் தவறியதை நாம் காண்கிறோம். அநேக சபை மக்கள் இந்த பணி தனக்கும் உரியது என்பதை அறியாதிருக்கிறார்கள். போதகர்களுக்கும் மிஷனரிகளுக்கும் மட்டும் தான் என்று கருதுகிறார்கள். அருமையான சகோதரனே, சகோதரியே! நீங்கள் ஒரு விசுவாசியாக இருப்பீர்களானால், கர்த்தருடைய வார்த்தையை மற்றவர்களுக்கு கொடுப்பதில் உங்களுடைய பங்கு என்ன என்பதை உணர்ந்து இருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் ஒரு திருச்சபையின் தலைவராக, ஊழியராக, சுவிசேஷகராக அல்லது போதகராக இருந்து இந்த வார்த்தைகளைப் படித்துக்கொண்டிருக்கலாம்;  தேவனுடைய வார்த்தையை சபைக்கு சரியாக கொடுக்கும் பணி உங்களுடையது என்பதை அறிந்து, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆத்துமாவுக்கு தேவனிடத்தில் கணக்குக் கொடுக்கவேண்டும் என்று நினைவு கூர்ந்து செயல்பட வேண்டும். அதுமட்டுமன்றி, உங்கள் திருச்சபை அங்கத்தினரை கர்த்தருடைய வார்த்தையை மற்றவர்களுக்கு சொல்ல சபையை ஊக்குவித்து அதன் மூலம் என்ன பங்கு வகிக்கின்றது என்பதைக் குறித்து  நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

இவ்வுலகத்தில் இருந்த பொழுது, இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பராக போதகர்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்தார். இன்றும் அநேக வேளைகளில் சபை மேய்ப்பரைக் கொண்டு தனது மந்தைகளை மேய்க்கிறதை நாம் பார்க்க முடிகிறது. மேய்ப்பர்கள் ஒவ்வொரு நாளும் சபை வளர்வதற்கு ஏற்ற விதத்தில், கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுக்க கடமைப் பட்டிருக்கிறார்கள். சபைக்கு வெளியேயும் கர்த்தருடைய வார்த்தை கொடுக்கப்படவேண்டும்.

நம் எல்லா கேள்விகளுக்கும் வேதத்திலே பதில் உண்டு அதை ஆராய்ந்து பார்க்கிறீர்களா?

குறிப்பு வசனம்: சங் 25: 8,9, சங் 32: 8, நீதி 8: 17-21, ஏசா 30: 21, யோவான் 5: 39, யோவான் 14: 6, யோவான் 16: 13

Loading...